புதுவை அரசு ஊழியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைப்பதிவு முறை
புதுவை அரசு ஊழியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைப்பதிவு முறை: நாராயணசாமி அறிவிப்பு
புதுவையில் அரசு ஊழியர்கள் சரியான நேரத்தில் வருவதை உறுதி செய்ய அனைத்து துறைகளிலும் பயோ மெட்ரிக் முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
இன்று காலை மின்துறை அலுவலகத்துக்கு காலையில் சென்ற போது 50 சத ஊழியர்கள் வரவில்லை. பின்னர் ஆய்வின்போது 25சதவீத ஊழியர்கள் வந்ததை நேரில் பார்த்தார்.புதுச்சேரி மாநில முதல்வராக நாராயணசாமி பதவியேற்றது முதல் தொடர் ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்.
மின்துறை தலைமை அலுவலகத்துக்கு இன்று காலை 8.45 மணிக்கு நாராயணசாமி சென்றார். அப்போது பணியில் 50 சதவீத ஊழியர்கள் மட்டும் இருந்தனர். முதல்வர் வந்துள்ள தகவல் தெரிந்து இதர ஊழியர்கள் விரைவாக வரத்தொடங்கினர்.அப்போது தலைமைப் பொறியாளரை அழைத்த நாராயணசாமி காலை 8.45 மணிக்கே ஊழியர்கள் வர வேண்டும் என்ற விதி உள்ளது. ஏன் தாமதமாக வருகின்றனர். மின்துறை அலுவலகத்தில் உடனே பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை அமல்படுத்துங்கள், நேரத்துக்கு வராத ஊழியர்களை திருப்பி அனுப்புங்கள் என உத்தரவிட்டார். 2 மணி நேரத்துக்கு மேல் பல்வேறு பிரிவுகளுக்கு சென்று ஆய்வு செய்தார். அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:''புதுச்சேரியில் தேவைக்கு அதிகமாகவே மின்சாரம் கிடைக்கிறது. புதுவைக்கு 266 மெகாவாட், காரைக்காலுக்கு 80 மெகாவாட், மாஹேவுக்கு 7 மெகாவாட், ஏனாமுக்கு 10 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. தேவையை விட கூடுதலாகவே மின்சாரம் கிடைத்து வருகிறது.வீடுகளுக்கும், தொழிற்சாலைகளு்கும் 24 மணி நேரம் தடையில்லா மின்சாரம் கிடைக்கச் செய்வதே எங்கள் நோக்கம்.பராமரிப்பு இல்லாதது, போதிய மின்மாற்றிகள் இல்லாததுதான் மின் கசிவுக்கு காரணம். இதை 2 மாதத்தில் சீரமைக்க உத்தரவிட்டுள்ளேன்.அரசு ஊழியர்கள் கடமை உணர்வோடு செயல்பட வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அது முறையாக பயன்படுத்தப்படவில்லை. பல சீர்திருத்தம் செய்ய உள்ளோம். குறிப்பாக அரசுப் பணியாளர்கள் நேரத்தோடு பணிக்கு வர வேண்டும். பணிக்கு நேரத்தோடு வருவதை கண்காணிக்க உத்தரவிட்டுள்ளேன்.
அனைத்து அரசு துறைகளிலும் அரசு ஊழியர்கள் சரியான நேரத்தில் வருவதை உறுதி செய்ய அனைத்து துறைகளிலும் பயோ மெட்ரிக் முறை நடைமுறைப்படுத்தப்படும். அதை கார்டு மூலம் தரலாமா அல்லது, ஊழியர்கள் கைரேகை மூலம் பதியலாமா என்பது ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்'' என்று தெரிவித்தார்.ஆய்வின் போது மின்துறை அமைச்சர் கமலக்கண்ணன், செயலாளர் சுந்தரவடிவேலு, தலைமைப் பொறியாளர் மதிவாணன் உடனிருந்தனர்.