கல்வித்துறையில் புது திட்டம் : பிரச்னைகளுக்கு தீர்வு காணும் மாணவர்கள்
சமூக பிரச்னைகளுக்கு தீர்வு காணும் திட்டங்களை செயல்படுத்தும் அரசு பள்ளி மாணவர்களை, மொரீஷியஸ் நாட்டிற்கு சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டம்
அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
'அனைவருக்கும் கல்வி இயக்கம்' சார்பில் அரசு துவக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களை தன்னம்பிக்கை உடையவர்களாக மாற்றவும், சமூக பிரச்னைகளுக்கு அவர்கள் மூலம் தீர்வு காணும் வகையில் 'செயல் திட்ட வழிக்கற்றல் திட்டம்' (புராஜெக்ட் பேசிக் ஸ்கீம்)
செயல்படுத்தப்படுகிறது. இதில், அந்தந்த பகுதி பிரச்னைகளுக்கு பள்ளி மாணவர்கள் மூலம் செயல் திட்டங்களை வகுக்க வேண்டும். அதில், அவர்களை பங்கேற்க செய்து வெற்றி பெற வைக்க வேண்டும் என்பது இதன் நோக்கம். இத்திட்டத்திற்கு மதுரை அருகே உள்ள பள்ளி மாணவர்களின் சாதனை, முன்மாதிரியாக காட்டப்பட்டுள்ளது. அப்பள்ளிக்கு மாணவர்கள் 2 கி.மீ., நடந்து செல்ல வேண்டும். மரங்கள் இன்றி வெயில் தாக்கம் அதிகம் இருந்தது. இதை உணர்ந்த தலைமை ஆசிரியர், மாணவர்கள் மூலம் ரோட்டின் இருபுறமும் மரக்கன்றுகளை நட்டார். ஒவ்வொரு மாணவருக்கும் தலா 2 தண்ணீர் பாட்டில் வழங்கினார். தினமும் வீட்டில் இருந்து வரும் போதும், பள்ளியில் இருந்து திரும்பும் போதும் பாட்டில்களில் நீர் நிரப்பி மரக்கன்றுகளுக்கு ஊற்ற வலியுறுத்தினார்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் அந்த ரோட்டில் மரம் நன்கு வளர்ந்து நிழல் தரும் சோலையாக மாறியது. இதுபோன்று அந்தந்த பகுதியில் நிலவும் பிரச்னைகளை
மாணவர்கள் மூலம் தீர்வு காண வலியுறுத்தப்படுகிறது.
இத்திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகிறது.
மாநிலத்தில் சிறந்த 5
பள்ளிகள் தேர்வு செய்யப்படும். அதில் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தும் பள்ளிக்கு ரூ.50ஆயிரம் பரிசு வழங்கப்படும். அப்பள்ளி மாணவர்கள், மொரீஷியஸ் நாட்டிற்கு சுற்றுலா அழைத்து செல்லப்படுவர்.
தேனி மாவட்டத்தில் 48
ஆசிரியர்களுக்கு இத்திட்டம் குறித்து பயிற்சி அளிக்கப்
படுகிறது.