நூலகங்களில் மாணவர்களை உறுப்பினராக்கும் திட்டம் தொடக்கம்
மாணவர்களின் பொது அறிவை மேம்படுத்த நூலகங்களில் மாணவர்களை உறுப்பினராக்கும் திட்டம் தொடக்கம்
மாணவிகளின் பொதுஅறிவை மேம்படுத்தும் விதத்தில் கன்னியாகுமரி மாவட்ட கல்வித்துறை சார்பில் நூலகங்களில் மாணவர்களை உறுப்பினராக்கும் திட்டம் தொடங்கப்ப
ட்டுள்ளது.
இன்றைய தொலைக்காட்சிகளின் ஆதிக்கம், இணைய தள பயன்பாடு உள்ளிட்ட நவீன யுக வளர்ச்சியில் மக்களிடம் வாசிப்பு பழக்கம் வெகுவாக குறைந்து வருகின்றது. அதிலும் மாணவ, மாணவிகள் பாடப்புத்தகங்களை தாண்டி நகர்ந்து வருவதில்லை. பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது என்ற இலக்கிலேயே மாணவர்களை பெற்றோர்களும் பார்க்கின்றனர். இதனால் மாணவர்கள் மத்தியில் ஒருவித மன அழுத்தம் விஞ்சி நிற்கின்றதே ஒழிய, வீட்டில் பெற்றோரிடம், தாத்தா, பாட்டிகளிடம், பள்ளியில் ஆசிரியர்களிடம் நீதிக் கதைகள் கேட்டு வளரும் தலைமுறைகள் இன்று இல்லை. மாணவர்கள் பள்ளிப் பாடப் புத்தகங்களை மட்டுமே படித்து வந்தார்களே தவிர, வாழ்க்கைக்கான வாசிப்புத் தளம் இல்லை. நன்னெறிக்கதைகள் வாசிக்கும் பழக்கமும், குழந்தைகளுக்கு போதிப்போரும் இன்று இல்லை.
இந்த குறைபாட்டை களையும் வகையில் கன்னியாகுமரி மாவட்டக் கல்வித்துறையும், நூலகத்துறையும் இணைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இதற்கான விதை விதைக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களை நூலகத்துக்கு செல்ல வைத்து, அவர்களை நூலக உறுப்பினர்கள் ஆக்குவதுதான் இந்த திட்டம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊர்ப்புற, கிளை, நகர, மாவட்ட மைய நூலகம் உள்பட 133 நூலகங்கள் உள்ளன. இதே போல் இங்கு அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் 133 உள்ளன. இவை இரண்டையும் இணைக்கும் வகையில் நூலகர்கள், தலைமை ஆசிரியர்கள் கலந்துகொண்ட சிறப்புக் கூட்டம் நாகர்கோவில் சேவியர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் தலைமையாசிரியர்களுக்கு மாணவர்களுக்கு பள்ளியில் போதிக்க நன்னெறி குறித்த புத்தகங்களும் வழங்கப்பட்டன.
இத்திட்டத்தின் நோக்கம் குறித்து குமரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் கூறியது; மாணவர்களின் ஒழுக்கம் சார்ந்த குறைபாடுகளை களைந்தாலே அவர்கள் சாதித்து விடுவார்கள். அந்த சாதனைக்கான அடித்தளம் நல்ல நூல்கள் மீதான வாசிப்பும், நேசிப்பும்தான்.
குமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு அனைத்து ஆசிரியர்களும் வீட்டுக்கு ஒரு நூலகம் அமைப்பது என்ற திட்டத்தை அமல்படுத்தினோம். அதிக நூல்களை சேர்த்து வைத்த ஆசிரியர்களுக்கும், நூல்களை எழுதி வெளியிட்ட ஆசிரியர்களுக்கும், அதிக நூல்கள் சேர்த்த,மாணவர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் பரிசு வழங்கினார். இதன் மூலம் குமரி மாவட்டத்தில் 30 லட்சம் நூல்கள் வீடுகளில் பராமரிப்பு செய்யப்பட்டது. நிகழாண்டில் இதை 50 லட்சம் நூல்களாக உயர்த்த உள்ளோம்.
இந்தக் கூட்டத்தில் பள்ளி தலைமையாசிரியர்கள், நூலகர்கள் ஒன்றிணைந்துள்ளனர். ஒவ்வொரு பள்ளித் தலைமையாசிரியரும், தங்கள் பள்ளி மாணவர்களை, அருகில் உள்ள நூலகங்களில் உறுப்பினராக சேர்க்க வைத்து, அது குறித்த விவரங்களை சேகரிக்க வேண்டும். அவர்கள் நூல்கள் எடுத்தது, வாசித்தது உள்ளிட்ட விவரங்கள் தொகுக்கப்பட வேண்டும்.
இதில் அதிக நூல்கள் வாசித்த மாணவர்கள் அனைவர் முன்னிலையிலும் பாராட்டப்படுவர். இது அவர்களுக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக இருக்கும். ஆகஸ்ட் 12 ஆம் தேதி தேசிய நூலக தினம் வருகின்றது. அதற்குள் அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களும் நூலக உறுப்பினர்களாக சேர்க்கப்படுவார்கள் என்றார் அவர்.
கூட்டத்தில் மாவட்ட நூலக அலுவலர் தேவகி, நாகர்கோவில் கல்வி மாவட்ட அலுவலர் ஜான்பெர்க்மான்ஸ், தக்கலை கல்வி மாவட்ட அலுவலர் ஜான் விஜயன், அரசுப் பள்ளித் தலைமையாசியர்கள், நூலகர்கள் கலந்துகொண்டனர்