2017 முதல் இணைப்புக் கல்லூரிகளிலும் விருப்பப் பாடத் தேர்வு முறை

2017 முதல் இணைப்புக் கல்லூரிகளிலும் விருப்பப் பாடத் தேர்வு முறை: அண்ணா பல்கலைக்கழகம் தீவிரம்
          விருப்பப் பாடத் தேர்வு முறையை வருகிற 2017-18 கல்வியாண்டு முதல் இணைப்புக் கல்லூரிகளிலும் அறிமுகம் செய்ய
அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளை பல்கலைக்கழக கல்விப் படிப்புகள் திட்ட மையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

        மாறி வரும் காலச் சூழல், தொழில் நிறுவனங்களின் தேவை ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர்கள் தாங்கள் விரும்பிய பாடத்தை தாங்களாகவே மாற்றித் தேர்வு செய்து கொள்ளும் வசதிதான் விருப்பப் பாடத் தேர்வு முறை (சி.பி.சி.எஸ்.). அதாவது, ஒரு படிப்பின் அடிப்படைப் பாடங்களில் அல்லாமல், துணைப் பாடங்களில் தாங்கள் விரும்பும் வேறு பாடத்தை மாணவர்கள் மாற்றித் தேர்வு செய்து படிக்க இந்த நடைமுறை வாய்ப்பளிக்கிறது. பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தலின் பேரில், மாநில அரசு கலை- அறிவியல் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், சில தன்னாட்சி கலை- அறிவியல் கல்லூரிகளிலும் சி.பி.சி.எஸ். முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னைப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் போன்ற பல்வேறு பல்கலைக்கழகங்களில் இந்த முறை ஏற்கெனவே நடைமுறையில் உள்ளன. இதற்கென தனி வழிகாட்டுதலையும் யுஜிசி வெளியிட்டது.
ஆனால், அண்ணா பல்கலைக்கழகம் மட்டும் இந்த நடைமுறையை அமல்படுத்தாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில், 2015 ஜனவரி 6-ஆம் தேதியன்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற அனைத்து மாநில உயர் கல்வி அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், சி.பி.சி.எஸ். முறை அனைத்தது உயர் கல்வி நிறுவனங்களிலும் அறிமுகம் செய்யப்படுவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகத் துறைகளான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, எம்.ஐ.டி., கட்டடவியல் பள்ளி ஆகிய நான்கு கல்லூரிகளில் மட்டும் 2015-16 கல்வியாண்டு முதல் சி.பி.சி.எஸ். முறை அறிமுகம் செய்யப்பட்டது. மாணவர்கள் இரண்டு விருப்பப் பாடங்களைத் தேர்வு செய்தாக வேண்டியது கட்டாயமாக்கப்பட்டது.
இந்த நடைமுறை இணைப்புக் கல்லூரிகளிலும் வருகிற கல்வியாண்டு (2017-18) முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக கல்விப் படிப்புகள் திட்ட மையத்தின் இயக்குநர் டி.வி.கீதா கூறியதாவது:
அண்ணா பல்கலைக்கழகத் துறைகளில் சி.பி.சி.எஸ். முறை ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. இணைப்புக் கல்லூரிகளைப் பொருத்தவரை, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பாடத் திட்டம் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற அடிப்படையில், வருகிற 2017-18 கல்வியாண்டில் புதிய பாடத் திட்டம் அறிமுகம் செய்யப்படும். அப்போதே, சி.பி.சி.எஸ். நடைமுறையையும் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளோம். இதற்கான பணிகள் இப்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் அவர்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)