புதிய கல்விக்கொள்கை, ஒரு அலசல்

5–வது வகுப்புவரைதான் ‘ஆல் பாஸ்’, ஆசிரியர் தேர்வுக்காக இந்திய கல்விப்பணி - புதிய கல்விக்கொள்கை, ஒரு அலசல்


ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது, அந்த நாட்டின் கல்விக்கொள்கையின் அடிப்படையில்தான் இருக்கிறது. அந்த முன்னேற்றம் சமூக முன்னேற்றமாக இருந்தாலும், பொருளாதார முன்னேற்றமாக இருந்தாலும், அறிவியல் வளர்ச்சி என்றாலும், புதிய புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிகாட்டும் முன்னேற்றமாக இருந்தாலும் சரி, அதற்கு அடித்தளம் அமைப்பது கல்விக்கொள்கைதான்.
மாறிவரும் உலக சூழ்நிலைகளுக்கேற்ப, கல்வித்திட்டங்களும் மாறிக் கொண்டே இருக்க வேண்டும்.ஆனால், இப்போது நடைமுறையில் இருக்கும் கல்விக்கொள்கை30 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டதாகும். அந்தக் காலத்துக் கல்விக்கொள்கை நிச்சயமாக இந்தக்காலத்துக்கு பொருந்தாது. இப்போது ‘இண்டர்நெட்’ காலத்தில் மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இன்னும் பழையகால கல்விக் கொள்கையின் அடிப்படையிலேயே கல்விச்சக்கரத்தை சுழலவைப்பது ஏற்புடையதல்ல.எனவே, புதிய கல்விக்கொள்கை அமைக்கவேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, மத்திய அரசாங்கம் ஓய்வுபெற்ற கேபினட் செயலாளர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையில், ஓய்வுபெற்ற டெல்லி அரசாங்க தலைமை செயலாளர் சைலஜா சந்திரா, முன்னாள் உள்துறை செயலாளர் சேவாராம் சர்மா, குஜராத் மாநில முன்னாள் தலைமை செயலாளர் சுதிர் மங்கத், ஓய்வுபெற்ற தேசிய கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் இயக்குனர் ஜே.சி.ராஜ்புத் ஆகியோர் கொண்ட குழுவை அமைத்தது.

இந்தக்குழு குறிப்பிட்ட காலத்துக்கு பிறகே தனது அறிக்கையை மத்திய அரசாங்க மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் தாக்கல் செய்தது. கல்விக்கொள்கையை உருவாக்க நியமிக்கப்பட்ட குழுவில் ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள்தானே இடம் பெற்றுள்ளனர், அறிவுசால் கல்வியாளர்களையோ, கல்வி நிபுணர்களையோ காணவில்லையே? என்று விமர்சனம் எழுந்துள்ளது. இந்த குழுவின் அறிக்கை உடனடியாக அமலுக்கு வந்துவிடப்போவதில்லை. அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு, மாநில அரசுகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டு, அதன்பிறகே புதிய கல்விக்கொள்கைநாட்டுக்கு வழங்கப்படும் என்று மத்திய அரசாங்கம் கூறியிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.இந்த அறிக்கையில் பல நல்ல அம்சங்கள் இருக்கின்றன. தற்போது கட்டாய கல்விச்சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி, மழலை வகுப்பில் சேரும் ஒரு மாணவனோ, மாணவியோ எப்படி படித்தாலும் 8–வது வகுப்புவரை அடுத்த வகுப்புக்கு பாஸ் ஆக்கிவிடுவார்கள். ‘பெயில்’ என்ற வார்த்தையே கிடையாது. எப்படியும் ‘பாஸ்’ ஆகிவிடுவோம் என்ற தைரியத்தில் சிலபல மாணவர்களும் சரிவர படிப்பதில்லை, ஆசிரியர்களும் அக்கறை எடுத்து பல இடங்களில் கல்வி கற்பிப்பதில்லை என்று குறைகூறப்பட்டது.இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் 8–வது வகுப்புக்கு பதிலாக, 5–வது வகுப்புவரைதான் ‘ஆல் பாஸ்’, அதற்குப்பிறகு 6–வது வகுப்பில் இருந்து ‘பாஸ்–பெயில்’ உண்டு என்று கூறப்பட்டுள்ளது. அதிலும் 2 ஆண்டுகள் தொடர்ந்து பெயிலானால் அதேவகுப்பில் படிக்கமுடியாது.

அதன்பிறகு மாற்றுக்கல்விதான். மேலும், பள்ளிக்கூட படிப்புகளில் சிறந்து விளங்கும் ஏழை குடும்பங்கள், சமூகரீதியாக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில்உள்ள சமுதாயங்களைச்சேர்ந்த ஒரு லட்சம் மாணவர்களுக்கு உயர்படிப்புக்காக உதவித் தொகை வழங்க வேண்டும்,ஆசிரியர் தேர்வுக்காக இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணிபோல, இந்திய கல்விப்பணி முறை அமலுக்கு வரவேண்டும், தொடக்க வகுப்புகளில் தாய்மொழி வாயிலாகவேகல்வி இருக்கவேண்டும்,இப்போதுள்ள கற்பித்தல்–கற்றுக்கொள்ளுதல் முறையில் மாற்றங்கள்வேண்டும், அமைதி, நல்லிணக்கம், வேற்றுமையை மதித்தல், சமத்துவம், உண்மை, தர்மம், அகிம்சை ஆகியவற்றை மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் வகையில்பாடத்திட்டங்கள் இருக்கவேண்டும் என்பதுபோல பல அம்சங்கள் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.கல்விக்கொள்கை என்பது மிக மிக முக்கியமானதாகும். இதைஉருவாக்கும் முன்பு மாநில அரசுகளோடு மட்டுமல்லாமல், கல்வியாளர்கள், பல்கலைக்கழகங்கள், பள்ளிக்கூட, கல்லூரி நிர்வாகங்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்கள் என்றுகல்வியின் தாக்கம் உள்ள அனைவரையும் கலந்து ஆலோசிக்க வேண்டும்.10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என்பதை சட்டமாக்கவேண்டும்

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)