டிஜிட்டல் கல்வியறிவு மாநிலமாக புதுச்சேரியை மாற்ற நடவடிக்கை: ஆளுநர் கிரண் பேடி
டிஜிட்டல் கல்வியறிவு பெற்ற மாநிலமாக புதுச்சேரியை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.
உலக இளைஞர் தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி தகவல் தொழில்நுட்பத் துறை, ஐசிடி அகாதெமி சார்பில் புதுச்சேரி கம்பன் கலையரங்கில் டிஜிட்டல் யூத் மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முதல்வர் நாராயணசாமி தலைமை வகித்தார்.
மாநாட்டில் டிஜிட்டல் விழிப்புணர்வு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளித்து கிரண் பேடி பேசியதாவது:
வளமான, தொழில் வளர்ச்சி மிகுந்த புதுச்சேரி மாநிலத்தை உருவாக்கும் வகையில் நானும், முதல்வரும் இணைந்து செயல்பட்டு வருகிறோம். புதுச்சேரி மாநிலத்தில் கல்வியறிவு பெற்ற இளைஞர்கள் அதிகம் பேர் உள்ளனர்.
தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கிய பெங்களூரு, தற்போது அதில் தேக்கமடைந்துள்ளது. எனவே, புதுச்சேரி மாநிலத்தை தகவல் தொழில்நுட்பத்தில் விரைவில் சிறந்து விளங்கும் வகையில் அரசு திட்டமிட்டு வருகிறது.
வழக்கமான கல்வியறிவு மட்டும் வேலைவாய்ப்பு பெற போதாது. டிஜிட்டல் கல்வியறிவும் வேண்டும். அதைப் பெற்றால்தான் தகவல் தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற முடியும். தகவல் தொழில்நுட்பம் மூலம் அரசின் அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பெறும் வகையில் கிராமப்புறங்களில் பொது சேவை மையங்கள் தொடங்கப்பட உள்ளன.
அனைவருக்கும் அரசு வேலை தருவது என்பது இயலாது. எனவே, ஒவ்வொரு மாணவ, மாணவியும் சுயதொழில் முனைவோராக உருவாகி, பிறருக்கு வேலை தரும் வகையில் செயல்பட வேண்டும். 21-ஆம் நூற்றாண்டு இந்தியாவுக்கே சொந்தமானது. உலகில் இளமையான மனிதவளம்தான் நமது சொத்து என்றார் கிரண் பேடி.
மின்னணு ஆட்சி முறைக்கு பட்ஜெட்டில் 3% நிதி ஒதுக்கீடு: மாநாட்டில் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:
இந்தியாவின் ஏற்றுமதி வருவாயில் 24 சதவீதம் தகவல்தொழில் நுட்பத் துறை மூலம் வருகிறது. ஆண்டுதோறும் 30 ஆயிரம் பேர் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பணிக்கு செல்லும் நிலை உள்ளது.
புதுச்சேரியில் கணினி ஆராய்ச்சிக்கு உத்வேகம் தரும் வகையில் ரூ. 60 கோடியில் இன்குபேஷன் சென்டர் எனும் ஆய்வு மையங்களை ஏற்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அவை தொடங்கப்பட்டவுடன் புதுச்சேரி மாணவர்களே கணினி தொடர்பான ஆய்வுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம்.
புதுச்சேரியில் 2 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க ஏற்பாடு செய்து வருகிறோம். புதுச்சேரியில் 43 சதவீதம் இளைஞர்கள் உள்ளனர். அரசால் அனைவருக்கும் வேலை வழங்க முடியாது. அதற்கான சூழ்நிலையை அரசு உருவாக்கும்.
ஹைதராபாத்தில் உள்ள பொது சேவை மையத்தில் பள்ளிச்சான்று, மின் கட்டணம், தண்ணீர் கட்டணம், பத்திரப்பதிவு உள்ளிட்ட அனைத்து சேவைகளும் செய்யப்படுகிறது. அதுபோல் புதுச்சேரியிலும் ஒரு மாதத்தில் கொண்டுவர உள்ளோம்.
மின்னணு ஆட்சி முறைக்காக பட்ஜெட்டில் 3 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்ய உள்ளோம். இரண்டு மாதத்தில் விமான சேவை தொடங்க உள்ளோம் என்றார் நாராயணசாமி.