'இஸ்ரோ'வின் புதிய ராக்கெட் இன்ஜின் சோதனை வெற்றி
வளி மண்டல ஆக்சிஜனை எரிபொருளாக பயன்படுத்தும், புதிய தொழில்நுட்ப ராக்கெட் இன்ஜினை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான, 'இஸ்ரோ' நேற்று வெற்றிகரமாக சோதனை
செய்தது. இதன் மூலம், புதிய தொழில்நுட்பத்தில் நுழைந்த, நான்காவது நாடு என்ற பெருமை, இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.
இஸ்ரோ சார்பில், வளி மண்டல ஆக்சிஜனை பயன்படுத்தும், 'ஸ்கிராம்ஜெட்' ராக்கெட் இன்ஜின், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில், நேற்று காலை, 6:00 மணிக்கு சோதனை செய்யப்பட்டது. ஏ.டி.வி., எனப்படும், முன்னேறிய தொழில்நுட்பம் உடைய
ராக்கெட்டில், 3,277 கிலோ எடைஉடைய, 'ஸ்கிராம்ஜெட்' என்ற புதிய தொழில்நுட்ப இன்ஜின் பொருத்தப்பட்டிருந்தது.
அதில், ஹைட்ரஜன் எரிபொருள் மட்டுமே நிரப்பப்பட்டிருந்தது. அதேநேரம், வளி
மண்டலத்திலுள்ள ஆக்சிஜனை எரிபொருளாக பயன்படுத்தும் தொழில்நுட்பம், இன்ஜினில் அளிக்கப்பட்டிருந்தது. 12 மணி நேர, கவுன்ட்-டவுனுக்கு பின், காலை 6:00 மணிக்கு, சோதனைக்கான ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்தது.
அதில், இணைக்கப்பட்ட இரண்டு, ஸ்கிராம் ஜெட் இன்ஜின்களும், திட்டமிட்டபடி, வளி மண்டல ஆக்சிஜன் மூலம், ராக்கெட்டை இயக்கி இலக்கை எட்டியது. ராக்கெட் ஏவப்பட்ட நேரத்தில் இருந்து, 300 வினாடிகளில், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, 320 கி.மீ., துாரத்தில் வங்கக்கடலில் விழுந்தது. அதை, இஸ்ரோ விஞ்ஞானிகள் மீட்டனர்.
இந்த சோதனையின் மூலம், வளி மண்டல ஆக்சிஜனை பயன்படுத்தும் தொழில்நுட்பத்தில், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி ஏஜன்சிக்கு அடுத்த, நான்காவது நாடு என்ற உலக சாதனையை இந்தியா எட்டியுள்ளது. இஸ்ரோவின் இந்த சாதனைக்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னரே, இந்த சோதனையை நடத்த இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. சென்னையில் இருந்து அந்தமான் சென்ற விமானம், கடல் பகுதியில் மாயமானது. அதை தேடும் பணியில், பல ராணுவ கப்பல்கள் ஈடுபட்டதால், ராக்கெட் சோதனை திட்டம் தள்ளி வைக்கப்பட்டு, நடத்தப்பட்டுள்ளது.
செலவு 10 மடங்கு குறையும்
* புதிய தொழில்நுட்ப இன்ஜினில், ஹைட்ரஜனை மட்டுமே எரிபொருளாக, 'இஸ்ரோ' பயன்படுத்துகிறது
* எரிபொருள் எரிய உதவும் ஆக்சிஜன், வளிமண்டலத்தில் உறிஞ்சப்படுகிறது
* இதனால், ராக்கெட்டில், ஆக்சிஜனுக்கு என, தனி கலன் வைக்க வேண்டியதில்லை. எனவே, எடை பெருமளவு குறையும். ராக்கெட் தயாரிப்பு, ஏவும் செலவும், 10 மடங்கு குறையும்
* வழக்கமாக ராக்கெட் இன்ஜினில், ஹைட்ரஜன், ஆக்சிஜன், ஆக்சிடைசர் போன்றவை அவற்றுக்கான கலன்களில் நிரப்பப்படும். ஸ்கிராம்ஜெட் இன்ஜினில், வளி மண்டலத்திலிருந்து உறிஞ்சப்படும் ஆக்சிஜன், ஆக்சிடைசராக வினையாற்றி, எரிபொருளை எரியச்செய்து, அசுர வேகத்தில், ராக்கெட்டை உந்தித்தள்ளும்
* ஸ்கிராம்ஜெட் இன்ஜின், வருங்காலத்தில், இஸ்ரோவின் மீண்டும் பயன்படுத்தக் கூடிய விண்கலங்களை, அசுர வேகத்தில் செலுத்த உதவும்
*l சர்வதேச விண்வெளி போக்குவரத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய, நான்காவது நாடு என்ற அந்தஸ்தை இந்தியா பெற்றுள்ளது. எதிர்காலத்தில், மீண்டும் மறு பயன்பாடு செய்யும் வகையிலான விண்கலத்தில், இந்த இன்ஜினை பயன்படுத்த, இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.