துப்புரவு பணிக்கு பட்டதாரிகள் உட்பட ஐந்து லட்சம் பேர் விண்ணப்பம்
உத்தரபிரதேச மாநிலத்தில், துப்புரவு தொழிலாளர் பணிக்கு, பட்டதாரிகள் உட்பட, ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
உ.பி.,யில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது. அங்குள்ள கான்பூர் மாநகராட்சி சார்பில், 'துப்புரவு தொழிலாளர் பணிக்கு, 3,275 இடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற ஆட்கள் தேவை' என, விளம்பரம் செய்யப்பட்டது. அதில், 1,500 இடங்கள் பொதுப்பிரிவினருக்கும், மற்றவை, இடஒதுக்கீட்டின் கீழும் நிரப்பப்படவுள்ளன.
இதற்கு கல்வி தகுதி எதுவும் தேவையில்லை.ஆனாலும், ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள், இந்த பணிக்காக குவிந்துள்ளன. விண்ணப்பித்த பலர், பட்டபடிப்பு, முதுநிலை பட்டங்கள் பெற்றவர்கள். விண்ணப்பித்த பலரின் கல்வி தகுதியை பார்த்து, அதிகாரிகளுக்கு தலை சுற்றத் துவங்கியுள்ளது. 'அதிகம் படித்த இவர்களை, துப்புரவு பணிக்கு எப்படி தேர்வு செய்வது' என, மாநகராட்சி நிர்வாகம் குழம்பி போயுள்ளது. விண்ணப்பங்களை அனுப்ப அவகாசம் இன்னும் உள்ளதால், விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை, ஏழு லட்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.