'மொபைல் ஆப்' உருவாக்குவது எப்படி? : சென்னை ஐ.ஐ.டி.,யில் புதிய படிப்பு
'ஆன்லைன்' கல்வி திட்டத்தில், 'மொபைல் ஆப்' உருவாக்குவது எப்படி என்பது குறித்த புதிய படிப்பை, சென்னை ஐ.ஐ.டி., உருவாக்கியுள்ளது. மத்திய அரசு, அனைத்து தரப்பு மக்க
ளுக்கும், தொழில்நுட்பம் சார்ந்த, தற்போதைய வளர்ச்சிக்கு ஏற்ற படிப்புகளை நடத்த, திறந்தவெளி ஆன்லைன் படிப்பு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதற்கான அனுமதியை சில வாரங்களுக்கு முன், பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., வழங்கியது. இதையடுத்து, இந்திய உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான, சென்னை ஐ.ஐ.டி., 'மொபைல் ஆப்' குறித்த படிப்பை அறிமுகம் செய்துள்ளது. இந்த படிப்பை யார் வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும் படிக்கலாம்; படிப்புக்கு கட்டணம் கிடையாது. ஆனால், தேர்வுக்கும், ஐ.ஐ.டி.,யின் சான்றிதழ் பெறவும் கட்டணம் உண்டு. சென்னை ஐ.ஐ.டி.,யின் www.imad.tech என்ற இணையதளத்தில், விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்யலாம். அவர்களின் இ - மெயில் முகவரிக்கு, பாடங்கள் வீடியோவாக அனுப்பப்படும். இணைய தளம் மூலம் அதற்கான இணைப்பை பயன்படுத்தி படிக்கலாம். 'மொபைல் அப்ளிகேஷன்' என்ற, 'மொபைல் ஆப்' அனைத்து வகையிலும் பயன்படும் நிலையில், அதை தங்களுக்கு தாங்களே உருவாக்கி கொள்ளும் முறை குறித்து, இந்த படிப்பில் கற்றுத் தரப்படும். செப்டம்பரில் துவங்கி, ஐந்து வாரங்கள் நடக்கும். அதன்பின், அக்., 16 முதல் ஆன்லைனில் தேர்வு நடக்கும். தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பிரபல நிறுவனங்களில், களப்பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புக்கான ஏற்பாடும் செய்யப்படும்.