சீசன் டிக்கெட்டுக்கு பதிலாக வருகிறது ரயில் கார்டு
புறநகர் ரயில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை அளிக்கும் வகையில், சீசன் டிக்கெட்டுக்கு பதிலாக, ரயில் கார்டு வழங்க, ரயில்வே திட்டமிட்டுள்ளது.
நாடு முழுவதும், ஒவ்வொரு நாளும், 1.1 கோடி பேர் புறநகர் ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். புறநகர் ரயில்களில் தினசரி பயணம் செய்பவர்களுக்கு, மாதாந்திர, மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள் மற்றும் ஓராண்டுக்கு என, சீசன் டிக்கெட் வழங்கப்படுகிறது.
காகிதப் பயன்பாட்டை குறைக்கும் வகையில், 'இ - டிக்கெட்' எனப்படும், 'மொபைல் ஆப்' மூலமாக டிக்கெட் வாங்கும் வசதி, புறநகர் ரயில்களுக்கு ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு கூடுதல் வசதியை அளிக்கும் வகையில், சீசன் டிக்கெட்களுக்கு பதிலாக, ரயில் கார்டு வழங்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்காக, 31 வங்கிகளுடன் ரயில்வே பேச்சு நடத்தி
வருகிறது.
இந்த ரயில் கார்டுகளை, ரயில் சீசன் டிக்கெட் வாங்குவதுடன், மற்ற வர்த்தக, வணிகப் பயன்பாட்டுக்கும் பயன்படுத்த முடியும்.
இதற்காக, கோல்டு, சில்வர், பிளாட்டினம் என்று மூன்று விதமான ரயில் கார்டுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாந்திர பாஸ் வைத்துள்ளவர்களுக்கு சில்வர்; ஆறு மாதங்களுக்கு கோல்டு; மற்றும் ஓராண்டுக்கு பிளாட்டினம் கார்டு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
நாட்டிலேயே அதிக அளவில் புறநகர் ரயில் சேவையை பயன்படுத்தும் மும்பையில், இந்த திட்டத்தை முதலில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மும்பையில், சராசரியாக ஒரு நாளைக்கு, 75 லட்சம் பேர் புறநகர் ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். அதைத் தொடர்ந்து, கோல்கட்டா, சென்னையில் இந்த சேவை அறிமுகம் செய்யப்படும் என, ரயில்வே மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.