'இ - சேவை' மையங்களில் இனி மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
இணையதளத்தில் புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை, 'இ - சேவை' மையங்கள் மூலம் செயல்படுத்த, மின் வாரியம் முடிவுசெய்து உள்ளது. புதிய மின் இணைப்பு பெறுவ
தற்கு, மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.
அலைக்கழிப்பு :
ஆனால், அங்கு உள்ள பொறியாளர்கள், லஞ்சம் கொடுத்தால் மட்டுமே, புதிய இணைப்பை விரைவாக வழங்குகின்றனர். பணம் தராதவர்கள், மின் இணைப்பு பெற முடியாமல் அலைக்கழிக்கப்படுகின்றனர். இதையடுத்து, இணையதளம் மூலம், புதிய மின் இணைப்பு வழங்கும்திட்டத்தை,மின் வாரியம், மே மாதம், சோதனை முறையில் துவக்கியது. இதை,முதல்வர் ஜெயலலிதா, இம்மாதம், 5ம் தேதி, முறைப்படி துவக்கி வைத்தார்.இத்திட்டத்தில், விண்ணப்பம் பதிவு செய்வது, ஆவணங்கள் சமர்ப்பிப்பது உள்ளிட்ட அனைத்து பணிகளும், கம்ப்யூட்டர் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இதனால், குறிப்பிட்ட காலத்திற்கு, புதிய இணைப்பு தர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. மே மாதம், சோதனை முறையில் துவக்கிய, இந்த திட்டத்திற்கு மக்களிடம் அதிக வரவேற்பு இருந்தும், அதிகாரிகள், போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை. இந்நிலையில், அரசு, 'இ - சேவை' மையங்கள் மூலம், புதிய மின் இணைப்பு வழங்க, மின் வாரியம் முடிவு செய்து உள்ளது.இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: நுகர்வோரிடம் வசூலிக்கப்படும் கட்டணத்தில் தான், மின் வாரியம் செயல்படுகிறது. எனவே, அவர்களை தேடி சென்று, சேவைவழங்கும் வகையில், இணையதளத்தில், புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
கடும் நடவடிக்கை :
இந்த சேவையை, மின் வாரிய இணையதளம் மூலம் பெறலாம். தற்போது, ஒவ்வொரு தாலுகாவிலும், இ - சேவை மையங்கள் உள்ளன. அங்கு, இணையதளம் மூலம் வருமானம், பிறப்பு உள்ளிட்ட சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. எனவே, அந்த மையத்தின் மூலம், புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் திட்டத்தையும், துவக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, சேவை மையங்களை நடத்தி வரும், அரசு கேபிள், 'டிவி' மற்றும், 'எல்காட்' நிறுவனங்களுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. விரைவில், அந்த திட்டம் செயல்படுத்தப்படும்.இணையதள புதிய மின் இணைப்பு திட்டம் குறித்து, மக்களிடம் தெரிவிக்காத பொறியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.