எஸ்எம்எஸ்., மூலம் வருமான வரி விபரம்
வருமான வரி செலுத்துபவர்களுக்கு, மாதந்தோறும் தங்களின் சம்பளத்தில் இருந்து கழிக்கப்படும் வரி தொகை குறித்த தகவலை எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கும் முறை விரைவில்
அறிமுகம் செய்யப்பட உள்ளது.
வரி செலுத்துவோர் மற்றும் வருமான வரித்துறையினரிடையே நல்லுறவை ஏற்படுத்துவதற்காகவும், வரி செலுத்துவோருக்கு ஏற்படும் இடையூறுகளை போக்குவதற்காகவும் இந்த முறை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் ஒன்று அல்லது 2 மாதங்களில் இதற்கான திட்டம் தயார் செய்யப்பட்டு விடும் என மத்திய நேரடி வரித்துறை கழக தலைவர் ராணி சிங் நாயர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யும் வருமான வரியை செலுத்துவதில்லை என நிறைய புகார்கள் வருகின்றன. இத்தகைய குழப்பத்தை சரி செய்வதற்காகவே எஸ்எம்எஸ் மூலம் தகவல் அனுப்பும் முறை கொண்டு வரப்பட உள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் பணியாளர்களுக்கு அவர்கள் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் வருமான வரித் தொகை, வருமான வரித்துறையிடம் போய் சென்றதா, இல்லையா என தெரிவிக்கப்படும். ஒருவேளை வரித் தொகை செலுத்தப்படவில்லை என்றால் உங்கள் நிறுவனத்திடம் உடனடியாக கேட்டு விடலாம் என்றார்.