புதிய கல்விக் கொள்கை - ஒரு பார்வை


          மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை, தேசியக் கல்விக் கொள்கையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.


               இதற்காக சில விவாதத் தலைப்புகளை 2015 ஜனவரியில் வெளியிட்டது. நாடு முழுவதும் 2.75 லட்சம் கருத்தறியும் கூட்டங்கள் நடத்தப்பட்டதாகவும், வலைதளம் மூலம் 29 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களிடமிருந்து கருத்துகள் பெறப்பட்டதாகவும், அதைத் தொகுத்து அறிக்கை தருவதற்கு ஒரு குழுவை அமைத்துள்ளதாகவும் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.



முன்னாள் அமைச்சகச் செயலாளர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியம் தலைமையிலான ஐவர் குழு தயாரித்த அறிக்கை 2016 ஏப்ரல் 30 அன்று மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சரிடம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்படவில்லை. வெளியிடப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தேசியக் கல்விக் கொள்கை 2016 வரைவிற்கான சில உள்ளீடுகள் (நர்ம்ங் ண்ய்ல்ன்ற்ள் ச்ர்ழ் ஈழ்ஹச்ற் ய்ஹற்ண்ர்ய்ஹப் டர்ப்ண்ஸ்ரீஹ் 2016) என்ற தலைப்பில் ஓர் ஆவணத்தைத் தனது வலைதளத்தில் வெளியிட்டு, பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளது.

ஆசிரியர், மாணவர், பெற்றோர், கல்வியியல் செயல்பாட்டு அமைப்பினர், அரசியல் கட்சியினர் என அனைவரும் ஆவணத்தைப் படித்து ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் மத்திய அரசுக்கு வழங்கிட முன்வர வேண்டும். இதற்கான அவகாசம் 2016 ஆகஸ்ட் 16 வரை.

புதிய தேசியக் கல்விக் கொள்கை இன்னும் உருவாக்கப்படவில்லை. அதற்காக வரைவுகள் எழுதப்படவில்லை. கல்விக் கொள்கை வரைவைத் தயார் செய்ய சில கொள்கை முன்மொழிவுகளை மட்டுமே மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

கல்வித் திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற உணர்வு இப்போது ஏற்பட்டதல்ல. இதற்கு முன்பாகவே ஏ.எல்.முதலியார், டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன், பேராசிரியர் டி.எஸ்.கோத்தாரி, டாக்டர் சட்டோபாத்தியாயா போன்றவர்கள் தலைமையில் தனித்தனியாக குழுக்கள் நியமிக்கப்பட்டு கல்வி சீரமைப்பிற்கான அறிக்கைகள் வெளிவந்தன.

இதில் பேராசிரியர் டி.எஸ்.கோத்தாரியைத் தலைவராகக் கொண்ட கல்விக் குழு 1968ல் அறிக்கை அளித்தது. இந்தக் குழு, தேசிய கல்விக் கொள்கையை வலியுறுத்தியதுடன் அனைத்து வழிகளிலும் சிறப்பாக அமைந்திருந்தது. கல்வி தேசிய வளர்ச்சியுடன் இணைந்திருக்க வேண்டும் என்பதே இதன் குறிக்கோள்.

ஆரம்பக் கல்வியை தேசிய அளவில் பரவலாக்குவதும், உயர்நிலை மற்றும் தொழில்நுட்பக் கல்வியை சர்வதேசத் தரத்திற்கு உயர்த்துவதும் அதன் முக்கிய நோக்கங்களாக இருந்தன. இதனால் பள்ளிகளும், கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் உருவாக்கப்பட்டு கல்வி வளர்ச்சிக்கு வழி காணப்பட்டது.

இவ்வளவு விரிவாக்கத்துக்குப் பின்பும் 1968-ஆம் ஆண்டின் கல்விக் கொள்கை முழுமை பெறவில்லை. இந்தக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்திட சரியான செயல் திட்டம் தயாரிக்கப்படவில்லை. போதிய நிதி வசதியும் செய்யப்படவில்லை.

1978-இல் அரசமைப்புச் சட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட திருத்தத்தினால், கல்வி மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. இதனால் கல்வித் துறையில் மத்திய அரசின் தலையீடு அதிகமாகி விட்டது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் ஆட்சிக் காலத்தில் 1985-ஆம் ஆண்டு ஒரு புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டது. இதுபற்றி தேசிய அளவில் விவாதம் நடத்தப்பட்டது. இந்த விவாதம் ஒன்பது மாதங்கள் நடைபெற்றது. ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், கல்வி வல்லுநர்கள், நிர்வாகிகள் மற்றும் பல்துறை சார்ந்த விற்பன்னர்கள் விவாதத்தில் பங்கேற்றனர்.

அப்போதைய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பி.வி.நரசிம்மராவ் புதிய கல்விக் கொள்கையை 8.5.1986 அன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். நாடாளுமன்றம் இரண்டு நாள்கள் கூடி புதிய கல்விக் கொள்கையின் மீது விவாதம் நடத்தி ஒப்புதல் அளித்தது.

தேசியக் கல்வி முறையை உருவாக்குதல், கல்வித் துறையில் உள்ள ஏற்றத் தாழ்வுகள், குறைபாடுகளை நீக்குதல் என்பவை அப்போதைய புதிய கல்விக் கொள்கையின் இரண்டு முக்கிய அம்சங்களாக இருந்தன. இவை செயல்பாட்டுக்கு வந்ததா என்பது கேள்விக்குறியே.

நாட்டின் சில பகுதிகளில் நவோதயா மாதிரிப் பள்ளிகள் உருவாக்கப்பட்டன. தேசிய ஒருமைப்பாடு, கலாசார மேம்பாடு, மும்மொழித் திட்டம், அனைவருக்கும் சமமான கல்வி, அறிவாற்றல் மிகுந்த மாணவர்களின் முழுத் திறனையும் வெளிப்படுத்துதல் ஆகியவை இதன் நோக்கம் என்று கூறப்பட்டது.

இங்கு மும்மொழித் திட்டம் என்று கூறப்பட்டாலும், ஒன்பதாம் வகுப்பிலிருந்து இந்தி அல்லது ஆங்கிலம் மட்டுமே பயிற்சி மொழியாக இருந்தது. இதனால் மாநிலங்களின் கடுமையான எதிர்ப்பினை எதிர்கொள்ள நேரிட்டது. இதற்குப் பிறகு 30 ஆண்டுகள் கழிந்து விட்டன. இப்போது பா.ஜ.க. அரசு புதிய தேசியக் கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்திட முனைந்துள்ளது.

இந்தப் புதிய தேசியக் கல்விக் கொள்கையின் முடிவாக 21 தலைப்புகளில் 143 கொள்கை முன்மொழிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் கல்விச் சிந்தனையாளர்கள் இக்கொள்கை முன்மொழிவுகள் பற்றி சமுதாயப் பின்னணி, வளர்ச்சி நோக்கில் தங்கள் கருத்துகளைக் கூறுவதற்கு முன்வரவேண்டும்.

எல்லா நிலையிலும் தரமிக்கதும் வாழ்நாள் முழுமையும் கற்றல் வாய்ப்பினை வழங்குவதுமான கல்வி அமைப்பினை உறுதி செய்தல், விரைந்து மாறிக் கொண்டிருக்கும் உலகமயமாதல் சார்ந்து வாழ்க்கையை நடத்துவதற்கும், தேச முன்னேற்றச் செயல்களில் ஈடுபடுவதற்குமான தகுதியுடைய மாணவர்களை உருவாக்கல் என்பனவற்றை தேசியக் கல்வி கொள்கை 2016 முன்னோக்காகக் கொண்டுள்ளது.

தரமும், பொருத்தமும் உடைய கல்வியை ஊட்டுதல், பள்ளிக் கல்வியிலும், உயர் கல்வியிலும் வேலை வாய்ப்பினைப் பெருக்குதல், முன் குழந்தைப் பருவக் கல்வி முதல் தொழில்நுட்ப, தொழில்சார் கல்வியை உள்ளடக்கிய சார்பு நிலைக்

கல்வியோடு வாழ்நாள் முழுதும் கல்வி பெறத்தக்க நிகர் வாய்ப்பினை உறுதி செய்தல், எல்லாப் பிரிவினருக்கும் கல்வியை வழங்குதல் ஆகியவை முழுமையான இலக்காகும்.

அனைத்து மாநிலங்களும் விரும்பினால் தாய்மொழியையோ, வட்டார மொழியையோ பயிற்று மொழியாகக் கொண்டு ஐந்தாம் வகுப்பு வரை கல்வி வழங்கலாம். உலக அளவிலான அறிவைப் பெறுவதற்கு ஆங்கில அறிவு முதன்மையான பங்கு வகிக்கிறது. எனவே குழந்தைகளை ஆங்கில மொழியில் வாசிக்கவும், எழுதவும் வல்லமை பெற்றவர்களாக ஆக்க வேண்டும்.

இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் சமஸ்கிருதத்தின் சிறப்பான முதன்மையினைக் கருத்திற்கொண்டும், நாட்டின் பண்பாட்டு ஒற்றுமைக்கு அதன் தனித்தன்மை வாய்ந்த பங்களிப்பினைக் கருதியும் பள்ளிக் கூடங்களில் அதனைக் கற்பிப்பதற்கு வசதி செய்யப்படும். பல்கலைக் கழக நிலையில் அம்மொழியைக் கற்பதற்கு மிகவும் தாராளமான வசதிகள் அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்திய நாடு பல்வேறு மொழிகள், சமயங்கள், பண்பாடுகள் நிறைந்த பன்முகம் கொண்டது. இங்கே ஒரு மொழியை மட்டும் முன்னிலைப்படுத்துவதற்கு எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. வடமொழியான சமஸ்கிருதத்திற்குத் தரும் மரியாதையை தென்மொழியாகிய தமிழுக்கும் தர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இந்தத் தேசியக் கல்விக் கொள்கையில் பன்னாட்டு மயமாக்கும் போக்கு வெளிப்படையாகத் தெரிகிறது. தரமுயர்ந்த 200 பல்கலைக்கழகங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் இந்தியப் பல்கலைக்கழகங்களோடு இணைந்து அவை இந்தியாவில் நிறுவப்படுவதற்காக ஊக்குவிக்கப்படும்.

தேவைப்படின் இந்தியப் பல்கலைக்கழகங்களின் வளாகங்கள் வெளிநாடுகளிலும் அமைக்கப்படும்.

கல்வியை வணிகப் பொருளாக்கி, வாங்கும் சக்தி உள்ளவர்களுக்கு மட்டுமே கல்வி என்னும் நிலை தவிர்க்கப்பட வேண்டும். உலகப் பல்கலைக் கழகங்களுக்குக் கதவுகளைத் திறந்து விடுவது உள்ளூர் பல்கலைக் கழகங்களின் வளர்ச்சிக்கு ஒருகாலும் உதவாது என்பதை அரசுக்கு உணர்த்த வேண்டும். தேர்ந்தெடுத்த தங்கள் மக்களுக்குக் கல்வியளிக்கும் கடமையிலிருந்து அரசாங்கம் பின்வாங்கக் கூடாது.

 கால மாறுதலுக்கு ஏற்ப அனைத்தும் மாறும்போது கல்வி மட்டும் மாறாமல் இருக்குமா? மக்களாட்சியில் அரசாங்கம் அடிக்கடி மாறலாம்.

அரசாங்கம் மாறும்போதெல்லாம் ஆளுங்கட்சியின் கொள்கைகள் கல்வியில் புகுத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில், அரசாங்கங்கள் தாற்காலிகம்; கல்வி நிரந்தரம்!

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)