உள்ளாட்சி தேர்தல் நடத்த தேர்தல் அதிகாரிகள் நியமனம்
சென்னை:ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரிகளை நியமிக்க, மாவட்ட கலெக்டர்களுக்கு, தேர்தல் கமிஷன் அதிகாரம் வழங்கியுள்ளது.
இதுகுறித்து, மாநில தேர்தல் கமிஷன் வெளியிட்டு உள்ள அறிக்கை:உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்காக, ஊரக வளர்ச்சி துறை இயக்குனர், நகராட்சி நிர்வாக இயக்குனர், பேரூராட்சி இயக்குனர் ஆகியோர், மாநில தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்பட்டனர்.
அதன்பின், அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்பட்டனர்; சென்னைக்கு மட்டும் மாநகராட்சி கமிஷனர், தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். வாக்காளர் பதிவு அலுவலர்களாக, வட்டார வளர்ச்சி அலுவலர், மாநகராட்சி மற்றும் நகராட்சி கமிஷனர்கள், பேரூராட்சி செயலர்கள் நியமிக்கப்பட்டனர்.
தற்போது, மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமிக்க, மாவட்ட கலெக்டர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.
அதன்படி, மாவட்ட கவுன்சிலர் தேர்தல் நடத்தும் அதிகாரியாக, மாவட்ட ஊரக வளர்ச்சி துறை இணை இயக்குனர் அல்லது மாவட்ட வருவாய் அலுவலரை நியமிக்க வேண்டும்; உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாக, ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர், வருவாய் கோட்ட அலுவலரை நியமிக்க வேண்டும்.
ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் நடத்துவதற்கு, ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் அல்லது வருவாய் கோட்ட அலுவலரை நியமிக்க வேண்டும்; உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாக,
வட்டார வளர்ச்சி அலுவலர் அல்லது வட்டாட்சியரை நியமிக்க வேண்டும்.ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் நடத்துவதற்கு, வட்டார வளர்ச்சி அலுவலரையும், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அல்லது
துணை வட்டாட்சியரை நியமிக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது