சம்பள கமிஷனால் சந்தையில் தாக்கம் ஏற்படுமா?
மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுள்ளது. இதனால், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கும்.
கார்களை வாங்குவர். இதனால் ஆட்டோமொபைல் துறையிலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும், மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர்.
இது உண்மை தான் என்றாலும், அதில் பாதி தான் உண்மை. மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வதால், அதற்கான பண த்தை மந்திரக்கோலால் கொண்டு வர முடியுமா? அந்த பணத்தை வேறொருவர் பாக்கெட்டில் இருந்து தானே எடுக்க வேண்டும்.
இந்த சம்பள உயர்வை, மத்திய அரசு, வரி வசூலில் இருந்து தானே தர முடியும். அரசுக்கு வரும் வரியின் பாதியளவு, வருமான வரி மூலம் கிடைக்கிறது. இந்த வரியை செலுத்துவது பணக்காரர்கள். உற்பத்தி வரி மற்றும் சேவை வரிகள் மூலம் பாதியளவு வருமானம் கிடைக்கிறது. இதை பணக்காரர்களும், ஏழைகளும் செலுத்துகின்றனர். இந்த வரியில், பாதியை பணக்காரர்களும் பாதியை ஏழைகளும் செலுத்துகின்றனர் என்று எடுத்துக் கொள்வோம்.
அப்படி பார்த்தால், மொத்த வரி வசூலில், நான்கில் ஒரு பங்கு ஏழைகள் மூலமும், நான்கில் மூன்று பங்கு பணக்காரர்கள் மூலமும் அரசுக்கு கிடைக்கிறது.
உதாரணத்துக்கு, மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வை அளிப்பதற்கு, கூடுதலாக, 100 ரூபாய் வரியை அரசு வசூலித்தால், அதில், 25 ரூபாய் ஏழையும், 75 ரூபாய் பணக்காரர்களும் செலுத்துகின்றனர். இந்த கூடுதல் வரி வசூலிப்பால், ஏழைகளின் வருமானம், 25 ரூபாய் குறைகிறது.அதனால், ஏற்கனவே திட்டமிட்டபடி, மோட்டார் சைக்கிள், ப்ரிஜ் போன்றவற்றை ஏழையால் வாங்க முடியாது.
பணக்காரர்கள் செலவு செய்வதும் குறையும். பணக்காரர்கள், அதிகம் சேமித்து, செலவை குறைப்பவர்கள். பணக்காரர்கள், 75 ரூபாய் வரி செலுத்த வேண்டியுள்ளதால், அவர்கள் செலவு செய்யும் தொகை, 25 ரூபாயாக குறைந்து வருகிறது.
இதனால், செலவு செய்யும் தொகை அல்லது தேவையின் அளவு ஒட்டுமொத்தமாக, 50 ரூபாய் குறையும். இவ்வாறு வசூலிக்கப்படும், கூடுதல் வரியான, 100 ரூபாய், மத்திய அரசு ஊழியர்களுக்கு செல்வதால், அவர்களுடைய வாங்கும் திறன் உயரும்.அதில், 50 ரூபாயை சேமித்து, 50 ரூபாய் கூடுதல் வருமானத்தை அவர்கள் செலவிடுவர்; அதாவது அரசு ஊழியர்களின், தேவையின் அளவு, 50 ரூபாயாக இருக்கும்.
ஒட்டுமொத்தமாக பார்க்கையில், அரசு ஊழியர்களின் தேவையின் அளவு, 50 ரூபாய் உயரும்; ஆனால், மற்றவர்களின் தேவையின் அளவு, 50 ரூபாய் குறையும். இதனால், சந்தையின் தேவை அளவு பூஜ்ஜியமே.இந்த சம்பள கமிஷனால், ஆட்டோமொபைல் துறையில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும் என்று கூறுவது சரிதான். அதாவது கார்களின் விற்பனை அதிகரிக்கும், மோட்டார் சைக்கிள் விற்பனை குறையும்.
மேலும், பொருட்கள் வாங்குபவர்கள் பிரிவு, மத்திய அரசு ஊழியர்கள் பிரிவுக்கு இடம்பெயரும்.
இது மட்டும் தான் மாற்றமே தவிர, சந்தையில் தேவையின் அளவில் எந்த தாக்கத்தையும், சம்பள கமிஷன் உயர்வு ஏற்படுத்தாது. அதே நேரத்தில், இவ்வாறு வசூலிக்கப்படும், 100 ரூபாய் கூடுதல் வரியை, நெடுஞ்சாலை, மின்னணு நிர்வாகம், விண்வெளி ஆராய்ச்சி போன்றவற்றில் முதலீடு செய்தால், அது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
உதாரணமாக, நெடுஞ்சாலை அமைக்க சிமென்ட், இரும்பு கம்பிகள் போன்றவற்றை வாங்க வேண்டும்.ஏற்கனவே கூறியபடி, சந்தையில், மக்களின் தேவைக்கான அளவு, 50 ரூபாய் குறையும். ஆனால், 100 ரூபாயும் சந்தைக்கு வருவதால், அந்த அளவுக்கு தேவையின் அளவு உயரும்.
நாட்டின் பொருளாதாரத்தை சரியான முறையில் துாக்கி நிறுத்துவதற்கு, சரியான சூத்திரம் - உயர்த்தப்படும் வரி வசூலை, நலத் திட்டங்களுக்கு தான் செலவழிக்க வேண்டும்; மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிப்பதற்கு அல்ல.