கற்பிக்கும் கை தவறலாமா? DINAKARAN
கல்வி சமூகத்தின் கண்களை திறப்பதற்கு சமம். எத்தனை உயர் பதவியில் இருப்பவர்களும் தங்கள் ஆசிரியரை காணும் போது காட்டும் பணிவு, கொடுக்கும் மரியாதை அதன் வலி
மையை உணர்த்தும்.
மாதா, பிதா, குரு, தெய்வம். நமது தமிழக மரபு இது. சமீப காலத்தில் தமிழகத்தில் கல்வியும், அதில் அரசின் விளையாட்டும், ஒரு சில ஆசிரியர்களின் அலட்சியமும் அச்சமாக இருக்கிறது. வியாபாரக்கல்வி ஒரு பக்கம் இருந்தாலும் அரசு தேர்வுகளில் விடைத்தாள் திருத்தும் பணியில் நடக்கும் குளறுபடிகள் மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடும் வகையில் உள்ளன.
8.30 லட்சம் மாணவர்கள் எழுதிய பிளஸ் 2 தேர்வில் 6,085 பேர் மறுபடியும் விடைத்தாள் திருத்துவதற்கு விண்ணப்பித்து இருக்கிறார்கள் என்ற ஒரு செய்தியே தரத்தின் ஒரு வெளிப்பாடு. மறுமதிப்பீட்டின் முடிவில் 2,021 பேரின் மதிப்பெண்கள் மாற்றப்பட்டு இருப்பதும், விடைத்தாளில் 150 மதிப்பெண்ணுக்கான மதிப்பீட்டில் ஏற்கனவே இருந்த மதிப்பெண்களில் இருந்து 1 முதல் 70 மதிப்பெண்கள் வரை உயர்த்தப்பட்டு இருப்பதும் எவ்வளவு பெரிய குற்றம் நடந்துள்ளது என்பதை நிச்சயப்படுத்தி உள்ள ஒன்று. வணிகவியல் மற்றும் கணக்குபதிவியல் பாடங்களை சேர்ந்த விடைத்தாள்களை திருத்துவதில் அதிக குளறுபடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வு மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஒன்று. வசதி படைத்தவர்கள் அல்லது விவரம் தெரிந்தவர்கள் மறுமதிப்பீட்டால் பயன்பெற்று இருக்கலாம். கிராமங்களில் வசிக்கும் ஏழை அப்பாவி மாணவ, மாணவிகளின் நிலையை யார் மதிப்பிடுவது?. அலட்சிய மதிப்பீட்டால் எத்தனை ஏழை மாணவர்கள் மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் வாய்ப்பை இழந்திருப்பார்கள். 6000 விடைத்தாளிலே இத்தனை குளறுபடி என்றால் எழுதிய 8.30 லட்சம் பேரின் விடைத்தாளையும் மறுமதிப்பிட்டால்...? சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் விளக்கம் அப்போது செல்லுபடியாகுமா?. ஏன் திருத்தும் பணியில் உள்ள சக ஆசிரியர்களின் மகன், மகளும் இதில் பாதிக்கப்பட்டு இருக்கலாம் தானே?.ஆசிரியர்கள் தரப்பில் விசாரித்தால் அரசாங்கம் மீது புகார் கணைகள்.அரசு மேல்நிலைப்பள்ளிகளில் எக்கச்சக்க காலியிடங்கள்.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்தும் போதிய ஒத்துழைப்பு இன்மை. விளைவு, மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆசிரியர்கள் விடைத்தாளை திருத்த அழைக்கப்படுகிறார்கள். இதனால் எக்கச்சக்க தவறுகள் என்கிறார்கள். மேலும் தமிழ், ஆங்கிலத்தை பொறுத்தவரை ஒரு நாளில் காலை 15, மாலை 15 என மொத்தம் 30 விடைத்தாள்களை திருத்த வேண்டும். முக்கிய பாடங்களைபொறுத்தவரை காலை 12, மாலை 12 என 24 விடைத்தாள்களை திருத்த இலக்கு நிர்ணயித்து உள்ளது. இதில் விடைத்தாளை திருத்தி பக்கத்துக்கு பக்கம் மதிப்பெண்களை கூட்டி அந்தந்த பக்க எண்களில் குறிப்பிட்டு மொத்த மதிப்பெண்களை கணக்கிட்டு முடிப்பதற்கு ஒரு விடைத்தாளுக்கு மட்டும் 20 முதல் 25 நிமிடங்கள் ஆகிறது. இப்படி இருக்கும் போது இலக்கு நிர்ணயித்து நெருக்கடி கொடுத்தால் எப்படி என்று ஆசிரியர்கள் தரப்பில் இருந்து பதில் கேள்வி எழுகிறது.