ரயில்வே மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை : அக்.15ல் சிறப்பு சிறப்பு முகாம்
மாற்றுத்திறனாளிகள் ரயிலில் கட்டண சலுகை பெறும் வகையில் அடையாள அட்டை வழங்கும் முகாம் ரயில்வே ஸ்டேஷன்களில் அக்.15ல் நடக்கிறது.
ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு, ரயில்வே சார்பில் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையின் எண்ணை பதிவு செய்தால் அவர்களுக்கு பயண கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மதுரை கோட்டத்தில் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை கேட்டு 6,791 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 5 ஆயிரம் பேருக்கு அடையாள அட்டை தயார் செய்யப்பட்டது. ஆனால் பெரும்பாலானவர்கள் அதை வாங்க வராமல் காலம் தாழ்த்தி வந்தனர்.
ரயில்வே துறை சார்பில் விண்ணப்பதாரர்கள் வசதிக்காக மதுரை, திண்டுக்கல், காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, துாத்துக்குடி ரயில்வே ஸ்டேஷன்களில் அக்.15ல் நடக்கும் முகாம்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம், அன்று பெற முடியாதவர்கள் அலுவலக வேலை நாட்களில் ரயில்வே ஸ்டேஷன்களில் பெற்றுக் கொள்ளலாம், என ரயில்வே நிர்வாகத்தினர் அறிவித்து உள்ளனர்.