பள்ளிகளுக்கு2ம் பருவ பாடப் புத்தகம் அக்.3ல் வழங்க வேண்டும்: கல்வித்துறை உத்தரவு
கடந்த 5 ஆண்டுகளில் பள்ளிக் கல்வித்துறை அடைந்துள்ள வளர்ச்சி குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது.
சென்னை கல்லூரிச் சாலையில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழக கட்டிடத்தில் நடந்த இந்த ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர். பள்ளிக் கல்வி செயலாளர் சபீதா தலைமை தாங்கினார். பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்க கல்வி இயக்குநர், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநர், தேர்வுத்துறை இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.
நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிக் கல்வித்துறையில் செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்து செயலாளர் சபிதா விளக்கினார். மேலும், தற்போது நடக்கும் காலாண்டுத் தேர்வுகள் முடிந்த பின் அறிவிக்கப்படும் விடுமுறைக்கு பிறகு அக்டோபர் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
பள்ளி திறக்கும் நாளில் அனைத்து மாணவ மாணவியருக்கும் இரண்டாம் பருவ பாடப்புத்தகங்களை கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அத்துடன் நாபார்டு திட்டத்தின் மூலம் அனைத்து மாவட்டத்திலும் கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்டும் பணியை துரிதப்படுத்தவும் உத்தரவிட்டார்.