கால்நடை பல்கலை 2ம் கட்ட கவுன்சிலிங்
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையில், இளநிலை பட்டப் படிப்புக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, வரும், 15ல் நடைபெறும். மேலும், புதிய சான்றிதழ் படிப்பும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது,'' என, துணைவேந்தர்
எஸ்.திலகர் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி: இப்பல்கலையில் தற்போது, இளநிலை கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் படிப்பில், 19; கோழியின உற்பத்தி மேலாண்மை, 10; உணவுத் தொழில்நுட்பம், ஆறு; பால்வள தொழில், ஒன்பது என, 44 இடங்கள் காலியாக உள்ளன. இதற்கான கலந்தாய்வு, சென்னை, வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லுாரியின் அண்ணா கலையரங்கில், வரும், 15ம் தேதி காலை, 9:00 மணிக்கு துவங்கும். இது தவிர, 'கால்நடை செவிலியர்' என்ற புதிய, 11 மாத கால சான்றிதழ் படிப்பு, புதுக்கோட்டையில் உள்ள பல்கலை மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் விரைவில் நடத்தப்படவுள்ளது; பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள், விண்ணப்பிக்கலாம்; வரும் 9ம் தேதி கடைசி நாள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.