பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை: அக்.2 முதல் அமல்!


       கடைக்குப் போனால் காசு இருக்கிறதோ இல்லையோ… பொருட்கள் வாங்கிக் கொண்டு திரும்பும்போது பிளாஸ்டிக் பைகள் வந்துவிடுகின்றன. 


      இதை பல்வேறு வகையில் பயன்படுத்தும் நிலையில், நாடு முழுவதிலும் உள்ள சுற்றுலாத்தலங்கள், நினைவுச்சின்னங்களில் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படவுள்ளது.

        இந்த நடைமுறை அக்டோபர் 2ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ‘தூய்மை இந்தியா' திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பரவலாகப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரிய சவாலாக விளங்குகின்றன. குறிப்பிட்ட மைக்ரானுக்கு குறைவாக இருக்கும் பாலித்தீன் பொருள்களுக்கு மக்கும் தன்மை இல்லை. அவற்றை மறுசுழற்சி செய்யவும் முடியாது. பிளாஸ்டிக் பைகள் குவிந்துள்ள பகுதியில், நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. மண் வளம் பாதிக்கிறது. மேலும், கால்நடைகள் அவற்றை உண்டு இறக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. ஒட்டுமொத்த சூழலியலுக்கே அச்சுறுத்தலாக விளங்கும் இந்த பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை ஒழிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 50 மைக்ரான் அளவுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகளை உற்பத்தி செய்வதற்கு அண்மையில் தடை விதிக்கப்பட்டது. அதற்கு அடுத்தகட்ட நடவடிக்கையாக சுற்றுலாத் தலங்களில் அவற்றைப் பயன்படுத்த தடை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா, டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“தேசிய நினைவுச் சின்னங்கள், சுற்றுலாப் பகுதிகள் ஆகியவற்றில் முழுமையாக பாலித்தீன் பயன்பாட்டை ஒழிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, காந்தி ஜெயந்தியன்று அந்தத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
சோதனை முயற்சியாக இப்போதே சில இடங்களில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 2ஆம் தேதி முதல் நாடு முழுவதிலும் அது விரிவுபடுத்தப்படும். சம்பந்தப்பட்ட சுற்றுலாத் தலங்களில் உள்ள பாதுகாவலர்கள், பார்வையாளர்களைச் சோதித்த பிறகே உள்ளே செல்ல அனுமதிப்பர். பாலித்தீன் பொருள்களை எடுத்துச் செல்ல முயலுபவர்களுக்கு சுற்றுலாத்தலங்களுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும். அதே வேளையில், குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொண்டு செல்வதற்கு தடையில்லை” என்றார் அவர்.
பெரிய பெரிய திரையரங்குகளுக்குள்ளே எந்த பொருளையும் தற்போது அனுமதிப்பதில்லை. அதற்கு நாமும் கட்டுப்பட்டுதான் இயங்குகிறோம். அதேபோல் பிளாஸ்டிக் பைகளின் கட்டுப்பாட்டையும் செயல்படுத்தினால் என்ன? ‘தூய்மை இந்தியா'வுக்குத் தோள் கொடுப்போம்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank