வெற்றிகரமாக 2 ஆண்டுகள் நிறைவு: செவ்வாய் கிரக தரவுப் பொக்கிஷம் ஆனது மங்கள்யான்!
விண்வெளி அறிவியலில் இந்தியாவை தலைநிமிரச் செய்த செவ்வாய் கிரகத்தைச் சுற்றி வரும் மங்கள்யான் செயற்கைக் கோள் தனது 2-வது ஆண்டை நிறைவு செய்துள்ளது.
மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் (MOM) என்று அழைக்கப்படும் இது விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் மிகப்பெரிய மைல்கல் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ செவ்வாயைச் சுற்றிவரும் செயற்கைக் கோள் அளித்த செப்டம்பர் 2015 வரையிலான தரவுகளை வெளியிட்டுள்ளது.
இது குறித்து இஸ்ரோ தெரிவிக்கும் போது, “மீதமுள்ள தரவுகள் 6 மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடப்படும். கிரக ஆராய்ச்சியில் இதுதான் வழக்கம். செப்டம்பர் 24, 2016-ல் மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் தனது 2 ஆண்டுகளை முடித்துள்ளது. மங்கள்யான் செயற்கைக் கோள் அனுப்பப்பட்டதற்கான தேவைகளை பூர்த்தி செய்துள்ளது. அது நல்ல நிலையில் உள்ளதால் மேலும் தரவுகளை நமக்கு அளிக்கும்” என்று கூறியுள்ளது.
செப்டம்பர் 24, 2014 இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் பொன்னான நாள் என்று கருதப்படுகிறது, இன்றைய தினத்தில்தான் முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகச் சுற்றுபாதையில் வெற்றிகரமாக செயற்கைக் கோள் செலுத்தப்பட்டது. விண்வெளி ஆராய்ச்சியில் 50 ஆண்டுகளாக இருந்து வரும் ரஷ்யா, அமெரிக்கா, மற்றும் ஐரோப்பாவினால் கூட தங்களது உயர்ரக ராக்கெட்டுகளைக் கொண்டும் இதனை சாதிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் 24, 2014 அன்று அனுப்பப்பட்ட செயற்கைக் கோள் தொடர்ந்து சுவாரசியமான செவ்வாய் கிரக தரவுகளையும், படங்களையும் அனுப்பி வருகிறது.
இதுவரை இந்தத் தரவுகளை 279 பயனாளிகள் பயன்படுத்தியுள்ளனர், மொத்தம் 976 பதிவிறக்கங்கள் என்று இஸ்ரோ கூறியுள்ளது.
செவ்வாய் கிரகத்தை விதம் விதமான கோணங்களில் பல்வேறு தூரங்களிலிருந்து படம் பிடித்து அனுப்பியுள்ளது எம்.ஓ.எம்.
சில அச்சுறுத்தல்களையும் செயற்கைக் கோள் சந்தித்தது. சூரிய கிரகணம் போன்ற இயற்கை நிகழ்வுகளை எதிர்கொண்டது, பூமியுடன் தொடர்பை பலநாட்களுக்கு இழந்தது. விண்வெளிக்கேயுரிய நிலமைகளினால் சில வேளைகளில் அதன் உணர் திறன் உபகரணங்களையும் சேதம் செய்யும் நிகழ்வுகளைச் சந்தித்து மீண்டுள்ளது,
“எம்.ஓ.எம். எத்தகைய இடர்களையும் சமாளிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. அது தன்னைத்தானே பராமரித்து கொள்ளும் என்கிறது இஸ்ரோ.
செவ்வாய் கிரக செயற்கைக் கோள் மங்கள்யான் அளித்த தகவல்கள்:
* செவ்வாய் கிரகத்தின் பண்டைய பருவ நிலையில் நீர் இருந்ததற்கான ஆதாரம் குறித்த படங்கள். அதன் பள்ளத்தாக்குகள், மலைகள் குறித்த படங்கள்.
* பனிப்படல மாற்றங்கள் குறித்த புரிதலை மேம்படுத்தும் படங்கள் குறிப்பாக அதன் வடக்குக் கோளத்தில் கோடை காலம் உருவாவது பற்றிய செய்திகள்.
* மலைகள், பள்ளத்தாக்குகளில் 1.5 கிமீ சுற்றுப்பரப்பிற்கு தூசிப்படிவுகள்.
* கனிமவளங்கள் மற்றும் இரும்பு தாது படிப படங்கள்
* செவ்வாயின் இரண்டு இயற்கைக் கோள்களான போபோஸ் மற்றும் டெய்மோஸ் குறித்த புதிய தகவல்கள்.
* எம்.ஓ.எம்-லிருந்து பெற்ற படங்களின் கொலாஜை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.