"பிறந்த 4 மாதத்துக்குள் குழந்தைகளின் செவித்திறனை கண்டறிவது அவசியம்'
பிறந்த 4 மாதத்துக்குள்ளாக குழந்தைகளின் செவித்திறன் குறைபாட்டை பெற்றோர்கள் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது அவசியம் என பாலவித்யாலய பேச்சுப் பயிற்சி ப
ள்ளி நிபுணர்கள் தெரிவித்தனர்.
சென்னையில் குழந்தைகளின் செவித்திறனை கண்டறிவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி, பாலவித்யாலய பேச்சு பயிற்சி பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், பள்ளியின் கௌரவ இயக்குநர் சரஸ்வதி நாராயணசாமி, துணை முதல்வர் டாக்டர் மீரா சுரேஷ், பேச்சு பயிற்சி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் குழந்தைகளின் செவித்திறனைக் கண்டறிவற்கான முறைகளை விளக்கினர். இதுகுறித்து சரஸ்வதி நாராயணசாமி கூறியதாவது:
பிறக்கும் குழந்தைகளில் ஆயிரத்தில் ஒருவருக்கு செவித்திறன் குறைபாடு உள்ளது. பெற்றோர்கள் ஆரம்ப கட்டத்திலேயே இந்தக் குறைபாட்டை கண்டறிவதில்லை. குழந்தைகளிடம் பெற்றோர்கள் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்க வேண்டும். இதன்மூலம், பேச்சு சப்தம் வரும் திசை, நபர்கள், அதன் அர்த்தம் ஆகியவற்றை குழந்தைகள் புரிந்து கொள்ள முற்படுவர்.
குழந்தைகளின் அசைவுகள், கேட்கும் திறன் ஆகியவற்றை ஆராய்ந்து, இவற்றில் குறைபாடு இருப்பின் ஆடியோ வல்லுநர்களிடம் பரிசோதிக்க வேண்டும். அதேபோல், குழந்தைகளை உறவினர்களுடனும், சக குழந்தைகளுடனும் இயற்கை சூழ்நிலையில் விளையாடவோ, பேசவோ பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும். இதன்மூலம், குழந்தைகளின் பார்வை, கேட்கும், பேசும் திறன்கள் மேம்படும்.
இந்தப் பள்ளியில் குறைபாடுடைய 95 குழந்தைகளுக்கு செவித்திறன் பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட வயதுக்குள் பயிற்சிப் பெற்று, செவித்திறன் குறைபாடு குணப்படுத்தப்பட்டு அவர்கள் பள்ளியில் பயில செல்கின்றனர். ஆனால், குறைபாடுடைய குழந்தைகளை 3-4 வயதுக்கு பிறகே பெற்றோர்கள் இந்த பள்ளிக்கு அழைத்து வருகின்றனர். அந்த வயதில் செவித்திறனை குணப்படுத்துவது கடினம்.
எனவே, பிறந்த 3-4 மாதங்களுக்குள் குழந்தைகளின் செவித்திறனைக் கண்டறிந்து, குறைபாடிருப்பின் இதுபோன்ற செவித்திறன் பயிற்சி பள்ளியில் சேர்க்க வேண்டும் என்றார் அவர்.