92 காசு கட்டணத்தில் ரூ.10 லட்சம் வரை காப்பீடு பெறும் திட்டம் பயணிகள் அமோக வரவேற்பு!!
ரெயில் பயணங்களில் ஏற்படும் விபத்துகள்: 92 காசு கட்டணத்தில் ரூ.10 லட்சம் வரை காப்பீடு பெறும் திட்டம் பயணிகள் அமோக வரவேற்பு!!
ரெயில் பயணங்களில் ஏற்படும் விபத்துகளுக்கு 92 காசு கட்டணத்தில் ரூ.10 லட்சம் வரை காப்பீடு பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்துக்கு பயணிகள் அமோக வரவேற்பு அளித்து உள்ளனர்.
‘விருப்ப பயண காப்பீட்டு திட்டம்’
ரெயில் பயணிகளுக்கு என புதிய இன்சூரன்சு திட்டத்தை அமல்படுத்த ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து ரெயில்வே நிர்வாகம் பல கட்ட ஆலோசனை நடத்தியது.
இதைதொடர்ந்து ரெயில் பயணிகளுக்கான ‘விருப்ப பயண காப்பீட்டு திட்டம்’ (ஆப்ஷனல் டிராவல் இன்சூரன்சு) என்ற புதிய திட்டம் செப்டம்பர் மாதம் 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு தெரிவித்திருந்தார்.
அதன்படி கடந்த 1-ந்தேதி முதல், இந்திய ரெயில்வே, உணவு மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் ரெயில் பயணிகளுக்கு 92 காசு கட்டணத்தில் ரூ.10 லட்சம் வரை காப்பீடு வழங்கும் திட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது.
இதற்காக பரிசீலிக்கப்பட்ட 17 காப்பீட்டு நிறுவனங்களில் இருந்து ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்சு கம்பெனி லிமிடெட், ஐ.சி.ஐ.சி.ஐ. லம்பார்டு ஜெனரல் இன்சூரன்சு கம்பெனி லிமிடெட் மற்றும் ராயல் சுந்தரம் ஜெனரல் இன்சூரன்சு கம்பெனி லிமிடெட் எனும் 3 காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் இந்த புதிய திட்டத்தை ஐ.ஆர்.சி.டி.சி. செயல்படுத்தி வருகிறது. புறநகர் ரெயில் பயணிகளை தவிர, அனைத்து வகுப்பு பயணிகளுக்கும் இந்த காப்பீட்டு வசதி அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
92 காசு பிரீமியம்
ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் ‘ஆன்-லைனில்’ ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, ‘இந்த புதிய இன்சூரன்சு திட்டத்தை தொடர விரும்பிகிறீர்களா? இல்லையா? என்று ஒரு கேள்வி இருக்கும். இந்த இன்சூரன்சு திட்டத்தில் சேர விரும்பினால், ‘ஆம்’ என கிளிக் செய்து பெயர், வயது, செல்போன் எண், முகவரி உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்யவேண்டும். இதையடுத்து பயணியின் டிக்கெட் கட்டணத்துடன் பிரீமியம் தொகையான 92 காசுகளும் வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்படும்.
இந்த இன்சூரன்சு திட்டமானது உறுதி செய்யப்பட்ட டிக்கெட், ஆர்.ஏ.சி. டிக்கெட், காத்திருப்போர் பட்டியல் டிக்கெட் என எல்லா டிக்கெட் வைத்திருப்போருக்கும் பொருந்தும். ஆனால், டிக்கெட்டை ரத்து செய்தாலோ, அல்லது இறுதி வரை காத்திருப்போர் பட்டியலில் இருந்தாலோ இந்த இன்சூரன்சு ரத்து செய்யப்படும். பிரீமியம் தொகையான 92 காசு, திருப்பித் தரப்படமாட்டாது.
ரூ.10 லட்சம் காப்பீடு தொகை
வங்கி கணக்கில் இருந்து பிரீமியம் தொகை எடுத்த சில வினாடிகளில், பயணியின் செல்போனுக்கும் குறிப்பிட்ட 3 காப்பீட்டு நிறுவனங்களில் ஏதாவது ஒரு நிறுவனத்தில் இருந்து எஸ்.எம்.எஸ். தகவல் கிடைக்கும். பயணியின் மின்னஞ்சல் முகவரிக்கும் ஒரு தகவல் பட்டியல் வரும். அதை பூர்த்தி செய்து உடனடியாக அனுப்பிவிட வேண்டும். அதனைத்தொடர்ந்து அந்த நிறுவனத்தின் காப்பீட்டுதாரராக பயணி ஆகிவிடுகிறார்.
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும், வெளிநாட்டு குடிமகன்களுக்கும் இந்த காப்பீட்டு வசதி பொருந்தாது. குறிப்பிட்ட ரெயில் பயணத்தின்போது, முழுமையான ஊனம் ஏற்பட்டால் காப்பீடு செய்த பயணிக்கும், மரணம் ஏற்பட்டால் பயணியின் நியமனதாரருக்கோ, வாரிசுதாரருக்கோ ரூ.10 லட்சம் வழங்கப்படும்.
15 நாட்களுக்குள் கிடைக்கும்
பகுதி அளவு ஊனம் ஏற்பட்டால், ரூ.7½ லட்சம் வழங்கப்படும். விபத்தில் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தால் மருத்துவச்செலவுக்காக ரூ.2 லட்சம் வழங்கப்படும். சில அசாதாரண சூழ்நிலைகளில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படும்போது, உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல ரூ.10 ஆயிரமும் வழங்கப்படுகிறது.
இந்த எதிர்பாராத சம்பவங்கள் நேரும்போது உடனடியாக சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனங்களை தொடர்புகொண்டு தெரிவிக்கவேண்டும். அப்படி தகவல் தெரிவிக்கப்பட்ட 15 நாட்களுக்குள் உரிய காப்பீட்டு தொகை சம்பந்தப்பட்ட பயணி அல்லது அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும். சம்பவம் நடந்து 4 மாதத்துக்குள் காப்பீட்டு தொகையை பெற்றுக்கொள்ள வேண்டும். 4 மாதத்துக்கு பிறகு எந்த காப்பீட்டு தொகையும் பெறமுடியாது.
78 சதவீத பயணிகள்
இந்த திட்டம் தற்போது ‘ஆன்-லைன்’ மூலம் மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் இந்த காப்பீட்டு திட்டத்தில் பல விஷயங்கள் சேர்க்கப்பட உள்ளது. இந்த திட்டத்துக்கு பயணிகள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து உள்ளது. அமல்படுத்தப்பட்ட முதல்நாளிலேயே 4 லட்சத்துக்கும் அதிகமானோர் 92 காசு பிரீமியம் தொகை செலுத்தி, இன்சூரன்சு எடுத்து உள்ளனர். திட்டம் செயல்படுத்தப்பட்டு இன்று (நேற்று) வரை ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் டிக்கெட் எடுத்தவர்களில் 78 சதவீத பயணிகள் இந்த திட்டத்தை பயன்படுத்தி உள்ளனர்.
ஒருவர் எத்தனை முறை பிரீமியம் வேண்டும் என்றாலும் எடுத்து கொள்ளலாம். அதில் விதிவிலக்கு கிடையாது. ஆனால் காப்பீட்டு தொகை குறிப்பிட்ட ரெயில் பயண நேரத்தில் நடக்கும் விபத்துகளுக்கு மட்டுமே பொருந்தும். மேலும் விவரங்களுக்கு www.ir-ctc.co.in என்ற இணையதளத்தில் சென்று பயணிகள் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.