ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் தஞ்சை, மதுரை, வேலூர், சேலம் நகரங்கள் சேர்ப்பு !
மூன்றாவது கட்ட ஸ்மார்ட் சிட்டி பட்டியலுக்கு தஞ்சை, மதுரை, வேலூர், சேலம் உள்ளிட்ட நான்கு நகரங்கள் தமிழகத்திலிருந்து தேர்வாகியுள்ளன.
.
பிரதமர் மோடி நாடு முழுவதும் ‘100 ஸ்மார்ட் சிட்டி’க்களை உருவாக்க திட்டமிட்டுள்ளார். நாடு முழுவதுமிருந்து
ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நகரங்களில் உலகத்தரத்திற்கு இணையான
உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படும். இதற்காக அடுத்த 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ஏற்கனவே இரண்டு கட்டமாக நாடு முழுவதுமிருந்து 33 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் 3-வது கட்ட ஸ்மார்ட் சிட்டி பட்டியலை நகர்ப்புற மேம்பாட்டு துறை மந்திரி வெங்கையா நாயுடு இன்று வெளியிட்டார்.
இந்த பட்டியல் குறித்து மந்திரி வெங்கையா நாயுடு கூறுகையில் ''3-வது ஸ்மார்ட் சிட்டி பட்டியலுக்கு இந்தியா முழுவதுமிருந்து 63 நகரங்கள் போட்டியிட்டதில் 27 நகரங்கள் தேர்வாகியுள்ளன.
தமிழகத்திலிருந்து வேலூர், மதுரை, சேலம், தஞ்சாவூர் ஆகிய நான்கு நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 27 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற ரூ.66,833 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது'' என்றார்.
தானே, நாசிக், நாக்பூர், அவுரங்காபாத், ஆக்ரா, அஜ்மீர், அமிர்தசரஸ், மங்களூர், வதோதரா, வாரணாசி, திருப்பதி, மங்களூர், அமிர்தசரஸ் நகரங்களும் ஸ்மார்ட் சிட்டி பட்டியலுக்கு தேர்வாகியுள்ளன.