ரிலையன்ஸ் ஜியோ ஆப்ஸ்'சால் சினிமா, 'டிவி'க்கு ஆப்பு!


           'ரிலையன்ஸ் ஜியோ' நிறுவனம், மூன்று நிமிடங்களில், ஒரு முழு திரைப்படத்தை, 'டவுண்லோடு' செய்யும், 'அப்ளிகேஷன்' உள்ளிட்ட பல்வேறு கலக்கல் அம்சங்களுடன் கூடிய, மொபைல் போன் செயலிகளை அறிமுகம் செய்துள்ளது. இதனால், போட்டி
நிறுவனங்கள் மட்டுமின்றி, சினிமா உள்ளிட்ட பொழுதுபோக்கு துறையும் பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.



ரிலையன்ஸ் ஜியோ, அறிமுகமான சில நாட்களில், நாடு முழுவதும் பிரபலமாகி விட்டது. மூன்று மாதங்களுக்கு, காசு செலவின்றி, இந்தியாவில் எந்த தொலைபேசி, மொபைல் போனுக்கும் பேசலாம்; இன்டர்நெட் பயன்பாட்டுக்கு, ஒரு ஜி.பி.,க்கு, 260 ரூபாய் வசூலிக்கும் நிறுவனங்கள் மத்தியில், எத்தனை ஜி.பி., வேண்டுமானாலும் இலவசமாக, டவுண்லோடு செய்யும் வசதியுடன் கூடிய, 'ஜியோ சிம்'களை அறிமுகப்படுத்தி உள்ளது.



கடும் கிராக்கி : இலவசமாக வழங்கப்படுவதால், ஜியோ சிம்களுக்கு கடும் கிராக்கி நிலவுகிறது. மேலும், 3,000 ரூபாயில் இருந்து துவங்கும், '4 ஜி' மொபைல் போன்களை, இந்நிறுவனம் விற்பனை செய்வதும் கூடுதல் சிறப்பு. அந்த விலை குறைவான மொபைல் போனை வாங்கி, டிசம்பர் வரை, இலவச சேவையை பயன்படுத்தி விட்டு, அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்ற மனநிலை பலரிடம் ஏற்பட்டு உள்ளது. ஜியோ வாடிக்கையாளர்கள், வேறு மொபைல் போன் வாடிக்கையாளர்களை அழைத்தால், அதற்கு தேவைப்படும், 'இன்டர் கனெக்டிவிட்டி' வசதியை, சில நிறுவனங்கள் தர மறுத்துள்ளன. 'இது தொடர்ந்தால் டிசம்பர், 31 வரை அறிவித்துள்ள இலவச சலுகையை, மேலும் நீட்டிக்க வேண்டி வரும்' என, ரிலையன்ஸ் எச்சரித்துள்ளது. இந்நிலையில், புதிய நிறுவனம் என நம்ப முடியாத வகையில், அசத்தலான, 'ஆப்ஸ்'களை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. குறிப்பாக, சினிமா, பாடல்கள், வீடியோ போன்றவை தொடர்பான ஆப்ஸ்கள், தற்போது சந்தையில் இருக்கும் செயலிகளை எல்லாம், மிஞ்சும் வகையில் உள்ளதாக



கூறப்படுகிறது. 'கூகுள் பிளே ஸ்டோரில்' உள்ள, பல ஆப்ஸ்களை பின்னுக்குத் தள்ளி, இவை பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. 'ஜியோ டிவி ஆப்' மூலம், 300 சேனல்களை நேரலையாக பார்க்க முடியும்; இதில், 40 சேனல்கள், மிக துல்லியாக தெரியக்கூடிய, எச்.டி., வசதியை பெற்றவை. மேலும், விரல் நுனியில், திரையரங்கையே கூட்டி வருகிறது, 'ஜியோ சினிமா' செயலி; இதில், 6,000 திரைப்படங்கள், 60 ஆயிரம் இசை ஆல்பங்கள் மற்றும், 10 மொழிகளில் வெளியாகும் தொலைக்காட்சி தொடர்களின் லட்சம் காட்சிப் பகுதிகளை காணலாம்.



'ஜியோ மியூசிக் ஆப்' மூலம், 10 மொழிகளில், ஒரு கோடி பாடல்களை கேட்க முடியும். இவற்றை எல்லாம் மிகக் குறைந்த விலைக்கு தர இருப்பதால், திரையரங்குக்குப் போவோர் மற்றும் தொலைக்காட்சி பார்ப்போரின் எண்ணிக்கையும் குறையும். இதன்மூலம், போட்டி நிறுவனங்களுக்கு மட்டுமின்றி, பொழுதுபோக்கு துறைக்கும், ஜியோ சவால் விடும் நிலை உருவாகியுள்ளது.



'இது எல்லாம் ஆரம்ப ஜரூர் தான். டிசம்பர், 31க்குப் பிறகு, கட்டணம் செலுத்தி, வாடிக்கையாளர்கள் சேவையை பெற வேண்டிய நேரத்தில் தான், அதற்கு உண்மையான சவால் காத்திருக்கிறது' என, போட்டி நிறுவனங்கள் சொல்கின்றன.



மலிவு விலை : ஆனால், அதற்கும் தயாராக இருப்பதைப் போல், 'பிரீ பெய்டு' இணைப்பில், 19 ரூபாய்க்கு, 'ரீசார்ஜ்' துவங்கி, 'போஸ்ட் பெய்டு' இணைப்பில், 149 ரூபாய் திட்டம் என, மலிவு விலை அம்சங்களையும், ரிலையன்ஸ் அறிவித்துள்ளது. மேலும், நாடு முழுவதும் இலவச, 'வை - பை ஹாட்ஸ்பாட்' என, பல்வேறு அஸ்திரங்களை கைவசம் வைத்திருக்கிறது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022