கல்வி சுமை இல்லை... சுவையாக்கும் புதிய திட்டம்!


எதிர்பார்ப்பு பள்ளிக்கல்வி வாழ்க்கைக்குச் சிறிதும் பயன்படுவதில்லை என்கிற குறைபாடு நம்மிடம் நீண்ட நாட்களாக உள்ளது. அதன் விளைவாகத் தோன்றியதுதான் 'ஏட்டுச் சுரைக்காய் கூட்டுக்கு உதவாது' என்ற பழமொழி. 


பாடநூலில் உள்ள கருத்துகளை குருட்டு மனப்பாடம் செய்து தேர்வில் வாந்தியெடுப்பது என்ற மரபான முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே அனைவரும் நினைக்கிறோம். ஆனால் அது நடைமுறையில் சாத்தியப்படாத ஒன்றாகவே உள்ளது.


படிக்கின்ற பாடத்தை நடைமுறை வாழ்வில் பயன்படுத்தினால், கல்வி என்பது அர்த்தமுள்ளதாகும். அதற்காகப் பல தன்னார்வக் குழுக்கள் நீண்ட நாட்களாகச் செயல்பட்டுவருகின்றன. 

இதன் தொடர்ச்சியாகத்தான் தேசிய அறிவியல் இயக்கம், மாணவர்களிடையே புதைந்து கிடக்கும் ஆற்றல்களை வெளிப்படுத்திட ஆண்டுதோறும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடத்தி, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் ஆர்வத்தைத் தூண்டி வருகிறது. அப்படிப் புதிய கண்டு பிடிப்புகளை உருவாக்கியவர்களுக்குக் 'குழந்தை விஞ்ஞானி' என்று விருது வழங்கி அவர்களைச் சிறப்பிக்கிறது. இது அரசு செய்யவேண்டிய பணி என்பதை இப்போதுதான் உணர்ந்திருக்கிறார்கள் நம் ஆட்சியாளர்கள். 
பள்ளி மாணவர்களுக்கு அறிவியல், கணக்கு, ஆங்கிலம் ஆகிய பாடங்களில் ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாக ஒரு இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறது நம் மத்திய அரசு. ராஷ்ட்ரிய அவிஷ்கார் அபியான் என்னும் செயல் திட்டம்தான் அது. இதனைச் சுருக்கமாக RAA எனக் குறிப்பிடுகின்றனர். தமிழில் 'தேசிய கண்டுபிடிப்பு இயக்கம்' என்று வேண்டுமானால் குறிப்பிடலாம். 
இந்தச் செயல் திட்டம் கடந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இத்திட்டத்தை முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த அப்துல் கலாம் அவர்கள் தொடங்கி வைத்தார். தற்போது ஒரு மாவட்டத்திற்குப் பத்துப் பள்ளிகளில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இன்னும் ஐந்து ஆண்டுகளில் படிப்படியாக அனைத்துப் பள்ளிகளிலும் இது நடைமுறைக்கு வரும் என்று திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
இதன் முக்கிய நோக்கமே, பள்ளி மாணவர்கள் கணக்கையும் அறிவியலையும் கற்பதை மகிழ்வானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் ஆக்குவதாகும். மேலும் பள்ளி சார்ந்த அறிவைப் பள்ளிக்கு வெளியே உள்ள வாழ்வோடு இணைப்பதும் ஆகும். உதாரணமாக, கணக்குப் பாடத்தில் வடிவியல் படிக்கின்றனர். இந்த வடிவியல் அன்றாட வாழ்க்கையில் எங்கே எப்படிப் பயன்படுகிறது என்பதை மாணவர்களுக்கு நேரடியாக உணர்த்துவதாகும் இது. 
பாலங்கள், கட்டடங்கள் கட்டும்போது அவை உறுதியாகவும் அழகாகவும் அமைய எப்படி வடிவியல் பயன்படுகிறது என்பதை நேரடியாகக் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்திற்கே சென்று தெரிந்துகொள்ளுதல்; அல்லது பொறியியல் வல்லுநர்களைக் கொண்டு விளக்கம் அளித்தல் போன்ற செயல்பாடுகள் வாயிலாக மாணவர்களுக்குப் புரிய வைப்பது. இப்படிச் செய்வதன் மூலம் கற்றல் என்பது அன்றாட வாழ்வோடு தொடர்புடைய ஒன்று என்பதை உணரும் மாணவர்களுக்குக் கற்றலில் ஆர்வமும் ஏற்படும். கல்வி சுமையானதாக இல்லாமல் சுவையானதாகும். 
இத்திட்டத்தில் ஆங்கிலத்திற்கு ELCOM - என்ற பெயரிலும் (English Language Communication), அறிவியலுக்கு STEM என்ற பெயரிலும் (Science Technology Engineering Mathematics), கணக்கிற்கு (ARIAL) என்ற பெயரிலும் (Arithmatic Algibra) செயல் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களை செயல்படுத்திட உயர்கல்வி நிறுவனங்களோடு பள்ளிகள் இணைக்கப்பட்டுள்ளன. 
கல்லூரிகள், IIT போன்ற உயர்கல்வி நிறுவனங்கள், மத்தியப் பல்கலைக்கழகங்கள் போன்ற நிறுவனங்களுக்கு மாணவர்களை அழைத்துச்சென்று அங்குள்ள வசதிகளைப் பள்ளி மாணவர்களுக்கு அளிக்க உள்ளனர். அங்குள்ள பேராசிரியர்களைப் பள்ளிக்கு அழைத்து ஆசிரியர், மாணவர்களின் சந்தேகங்களைப் போக்கும் விதமாகவும் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
ஒவ்வொரு பாடத்தையும் இயன்ற வரை செயல்வழியாக செய்து பார்த்துப் புரிந்துகொள்வது, கணித மன்றங்கள், அறிவியல் மன்றங்கள் போன்ற மன்றச் செயல்பாடுகளில் மாணவர்களை முழுமையாக ஈடுபடுத்துவது போன்ற பல குறிப்பிடத்தக்க குறிக்கோள்களை இத்திட்டம் கொண்டுள்ளது. '6 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவர்களே இத்திட்டத்திற்கான இலக்கு' என மத்திய அரசு அறிவித்துள்ளது. 
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தேசிய அளவில் பள்ளிக்கல்வித்துறை செயலர் உயர்கல்வித்துறை செயலர் இணைந்த குழுவும் மாநில அளவில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தலைமையிலான குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி அனைவருக்கும் கல்வி இயக்கத்திலிருந்தும் தேசிய இடைநிலைக் கல்வித் திட்டத்திலிருந்தும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
அறிவியல், கணக்கு ஆகிய பாடங்களில் புதுமைச் செயல்பாடுகளை நிகழ்த்துவதற்காக 33 கோடி ரூபாயும், ஆசிரியர்களுக்கான பயிற்சிக்காக 98 கோடி ரூபாயும், கற்றல் கற்பித்தல் உபகரணங்களுக்காக 6.5 கோடி ரூபாயும் மேலும் RMSA (ராஷ்ட்ரிய மத்யமிக் சர்வசிக்ஷ அபியான்- தேசிய இடைநிலைக் கல்வித்திட்டம்) மூலம் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க 125 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகள் அறிவியல் மாநாடு, ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு, கணித மேளா போன்றவற்றைக் கல்வித்துறையே முன்னின்று நடத்துவது போன்ற முக்கிய அம்சங்களும் இத்திட்டத்தில் உள்ளன. 
ஆசிரியர்கள் - அதிலும் குறிப்பாக அறிவியல், கணக்குப் பாட ஆசிரியர்களின் முக்கியமான பணி, அனைத்துவிதமான கற்றல் கருவிகளையும் இயன்றவரை தலைமை ஆசிரியர் உதவியோடு முழுமையாகப் பயன்படுத்தி மாணவர்களின் ஆர்வத்தைக் கணக்கிலும் அறிவியலிலும் ஈர்ப்பதாகும். ஆசிரியர்கள் மாதம் ஒரு செயல்திட்டத்தை அறிவியலிலும் கணக்கிலும் மாணவர்களைக் கொண்டு செயல்படுத்த வேண்டும். அதன் வாயிலாக மேற்கண்ட பாடங்களில் மிகவும் ஆர்வமாகவும் துடிப்பாகவும் செயல்படும் மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களை உயர்ந்த நிலைக்குக் கொண்டுவருவது இதன் நோக்கமாகும். 
இந்தத் திட்டங்களை எல்லாம் அறிக்கைகளாக மட்டும் விட்டுவிடாமல் நடைமுறையில் முறையாக செயல்படுத்தினால் மாணவர்களை கேள்விக்கு பதில் எழுதுபவர்களாக இல்லாமல் கேள்விகளைக் கேட்பவர்களாக மாற்றிடமுடியும். இதனை கடமைக்கு செய்யாமல் அர்ப்பணிப்பு உணர்வோடு செய்தால் கல்வித்துறையில் மாபெரும் புரட்சி ஏற்படும் என்பது உறுதி. 

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank