பணத்தை செலவிடுவதை விட்டுவிட்டு குழந்தைகளுடன் அதிக நேரம் பெற்றோர் இருப்பது முக்கியம்

பணத்தை செலவிடுவதை விட்டுவிட்டு குழந்தைகளுடன் அதிக நேரம் பெற்றோர் இருப்பது முக்கியம் - உயர் நீதிமன்றம்
        குழந்தைகளுக்காக பணத்தை செலவிடுவதை விட்டுவிட்டு,  அவர்களுடன் நேரத்தை செலவிடுவதை பெற்றோர்க
ள் முக்கியமாக கருத வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் அறிவுரை வழங்கியுள்ளார்.

கடலூர் மாவட்டம், திட்டக்குடி பெருமலை கிராமம் புதுகாலனியைச் சேர்ந்தவர்  பிரகாஷ் (22). இவரை, பென்னாடம் போலீசார்,  பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான போக்ஸோ சட்டத்தின் கீழ் கடந்த ஜூலை 7ம் தேதி கைது செய்து  சிறையில் அடைத்தனர். அதே பகுதியைச் சேர்ந்த மைனர் பெண்ணை காதலித்து கடத்தி, திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரகாஷ் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், மனுதாரர் பிரகாஷுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அந்த உத்தரவில் நீதிபதி வைத்தியநாதன் கூறியதாவது:

பாதிக்கப்பட்ட பெண் தன்னுடைய வாக்குமூலத்தில் தான்தான் விருப்பப்பட்டு பிரகாஷுடன் சென்றதாகவும், பெற்றோர் தீவிரமாக தனக்கு திருமண வரன் பார்ப்பதாகவும், அதில் தனக்கு விருப்பமில்லை என்றும், தன்னை அழைத்து செல்லாவிட்டால் விஷம் குடித்துவிடுவேன் என மிரட்டியதாகவும், தனது விருப்பத்திற்கு எதிராக பெற்றோர்கள் செயல்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளார். பிரகாஷின் ஜாமீனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றாலும், 84 நாட்களாக சிறையில் இருப்பது, பெண்ணின் வாக்குமூலம், 6 நாட்களுக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய இயலாதது போன்ற காரணங்களாலும், காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதாலும் பிரகாஷுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது.  10 ஆயிரத்துக்கான இரு நபர் உத்தரவாதத்தை திட்டக்குடி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம். 

மேலும், தினமும் காலை 10.30 மணிக்கு நான்கு வாரங்களுக்கும், பின்னர் விசாரணைக்கு தேவைப்படும்போதும் விசாரணை அதிகாரி முன்பு மனுதாரர் ஆஜராக வேண்டும். சாட்சிகள்,  ஆதாரங்களை கலைக்கக் கூடாது. தலைமறைவாக கூடாது. தவறும்பட்சத்தில், திட்டக்குடி நீதிமன்றம் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இந்த வழக்கை முடிப்பதற்கு முன்பாக ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அதாவது, குழந்தைகளுக்காக பணத்தை செலவிடுவதைவிட, அவர்களுக்காக தங்களது நேரத்தை செலவிடுவது முக்கியம் என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும். இந்த வழக்கை பொறுத்தவரை பெண்ணின் விருப்பப்படியே பிரகாஷ் அந்த பெண்ணை அழைத்து சென்றுள்ளான். இந்து திருமண சட்டத்தின்படி ஆண், பெண்ணுக்கான திருமண வயது நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், அந்த வயதுக்கு  முன்பாகவே அவர்கள் ஒருவருடன் ஓடிப் போய்விடுகிறார்கள். இதன்மூலம் சட்டத்தின்முன் இவர்களின் திருமணம் செல்லாதது ஆகிறது. அதுமட்டுமல்லாமல், அந்த குழந்தைகளின் கனவுகள் சிதைந்து விடுவதுடன், அவர்களை வளர்த்த பெற்றோரின் மேன்மைக்கு குந்தகமும் ஏற்படுகிறது. இதுபோன்ற குற்றங்களுக்கு ஊடகங்கள் காரணமாக அமைகிறது.

சமூக சிந்தனையுடன் பார்க்கும்போது, குழந்தைகளிடம் நல்ல எண்ணங்களை கொண்டு வருவதில் பெற்றோரின் பங்கு முக்கியமானதாக உள்ளது. தற்போதுள்ள நிலையில் பெரும்பாலான குடும்பங்களில் பெற்றோர்களின் மீதுள்ள பயத்தினால் குழந்தைகள் தங்களின் எண்ணங்களையும், விருப்பங்களையும் வெளியே சொல்ல பயப்படுகின்றனர். குழந்தைகளிடம் தோழமையுடன் பெற்றோர்கள் பழகும்போதுதான், குழந்தைகள் அனைத்தையும் பகிர்ந்து கொள்வார்கள். அப்போதுதான் பெற்றோரிடம் எதையும் மறைக்கக் கூடாது என்ற மனப்பான்மை குழந்தைகள் மத்தியில் உருவாகும். பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்வதும், குழந்தைகளுடன் போதிய நேரத்தை செலவிடாததும் இருவருக்குமிடையே தூரத்தை அதிகப்படுத்துகிறது. 

பலர் தனிக்குடித்தனம் செல்வதால், தாத்தா - பாட்டி ஆகியோர் முதியோர் இல்லங்களுக்கு அனுப்பப்படுவதுடன், தங்களை கவனிக்க ஆளில்லாதவர்களாக குழந்தைகள் மாறிவிடுகிறார்கள்.     குழந்தைகளுக்காக பணத்தை செலவிடுவதைவிட, அவர்களுக்காக தங்களது நேரத்தை செலவிடுவது முக்கியம் என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும். இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank