மனவளர்ச்சி குன்றியவர்களை குணப்படுத்தும் குதிரையேற்றம்
குதிரையேற்ற பயிற்சி மூலம், மனவளர்ச்சி குன்றியவர்களை குணப்படுத்தும் சிகிச்சை முறையை, திருச்சியில் உள்ள தனியார் சிறப்பு பள்ளி செயல்படுத்தி வருகிறது.
திருச்சி, கே.கே., நகர் உடையான்பட்டியில், மனவளர்ச்சி குன்றியவர்கள் மேம்பாட்டுக்காக,
'இன்டேக்ட்' தனியார் சிறப்புப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, 100க்கும் மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோர் தங்கி படித்து, பல்வேறு தொழிற்பயிற்சிகளை பெற்று வருகின்றனர்.
'ஹைப்பர் ஆக்டிவிட்டி'
இவர்களை குணமாக்க, குதிரையேற்ற சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்காக, 'பிசியோதெரபி' டாக்டர் நியமிக்கப்பட்டுள்ளார். மனவளர்ச்சி குன்றியவர்களில், 'ஆட்டிசம்' எனப்படும் புற உலக சிந்தனை அற்றவர்கள், சி.பி., எனப்படும் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், 'ஹைப்பர் ஆக்டிவிட்டி' எனப்படும் அதீத சுறுசுறுப்பு உடையவர்களுக்கு, இந்த குதிரையேற்ற சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பள்ளியின், 'பிசியோதெரபிஸ்ட்' பாரதிதாசன் கூறியதாவது: மனவளர்ச்சி குன்றியவர்களில் நடக்க முடியாதவர்கள், கை, கால்களை துாக்க முடியாதவர்கள், வாயில் எச்சில் ஒழுகுபவர்கள், வாய் பேச முடியாதவர்கள் என, குறிப்பிட்டவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு குதிரையேற்ற பயிற்சி அளிக்கிறோம்; இது ஒரு சிகிச்சை முறை தான்.
நடக்க முடியாத குழந்தைகள், குதிரையில் சவாரி செய்யும் போது, அவர்களின் கால்கள் விரிவடைந்து, இடுப்பு பகுதியில், நடை பயிற்சிக்கான ஆற்றல் உண்டாகிறது. குதிரையின் நடை, அதில் அமர்பவருக்கு இயற்கையாக சில பயன்களை அளிக்கிறது.
அதன்படி, வாய் தாடைகள் வலுப்பெறும், சுவாசம் சீராகும். இதனால், எச்சில் ஒழுகுவது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விடும்; அவர்களின் நடத்தையிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். பயிற்சி அளிக்கும்போது, பிசியோதெரபிஸ்ட், குதிரையேற்ற பயிற்சியாளர், உதவியாளர் என மூன்று பேர் இருப்போம்.
31 குழந்தைகளுக்கு
பொதுவாக, மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு விலங்குகள் என்றால் பிரியம். ஆகையால், அடம் பிடிப்பவர்கள் கூட, குதிரையில் உட்கார வைத்து பயிற்சிகள், பாடங்கள் சொல்லிக் கொடுத்தால், அவற்றை நன்றாக கேட்டுக் கொள்கின்றனர்.சிலர், தங்களை தாங்களே வருத்திக் கொள்பவர்களாக இருப்பர். அவர்களுக்கு இந்த குதிரையேற்ற பயிற்சி அளித்த பின், அவர்களின் பழக்க
வழக்கங்களில் வியக்கத்தக்க மாற்றம் உண்டாகியுள்ளது.
சிறப்பு பள்ளி தாளாளர் காருண்யா எபினேசர்
கூறுகையில், ''2010 முதல் இங்கு குதிரையேற்ற பயிற்சி அளிக்கப்படுகிறது. ஸ்வீடன் நாட்டின் கால்நடை மருத்துவ மாணவர்கள், இந்த முறையை இங்கு வந்து சொல்லி கொடுத்தனர்.
''குதிரைகள் பராமரிப்புக்கு செலவு அதிகம் என்றாலும், குழந்தைகளின் ஆர்வத்தையும், அவர்கள் குணமாவதையும் பார்க்கும்போது, அது பெரிய விஷயமாக தெரிவதில்லை,'' என்றார்.