'மெகா கேம்பஸ்' பணி வாய்ப்பு :'ஆன்லைன்' தேர்வு கட்டாயம்
அண்ணா பல்கலையில், இன்ஜி., மாணவர்களுக்காக நடக்கும், 'மெகா கேம்பஸ்' தேர்வுக்கு, 'ஆன்லைன்' எழுத்துத் தேர்வு கட்டாயமக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசின், ஐ.ஐ.டி., கல்வி நிறுவனத்திற்கு சவாலாக விளங்கும் வகையில், தொழில்நுட்ப கல்வியில் அண்ணா பல்கலை செயல்படுகிறது.மாணவர்களுக்கு, 'கேம்பஸ்' தேர்வு மூலம் வேலைவாய்ப்பை பெற்றுத் தரவும், பெரிய நிறுவனங்களுடன் பல்கலை ஒப்பந்தம் செய்துஉள்ளது.
இந்த ஆண்டு, சென்னை ஐ.ஐ.டி., மாணவர்களுக்கே கிடைக்காத, ரோல்ஸ் ராய்ஸ் போன்ற பிரபல நிறுவனங்கள், அண்ணா பல்கலை மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு தர முன் வந்துள்ளன. முதற்கட்ட முகாம், ஆக., மாதம் துவங்கி தினமும் நடந்து வருகிறது. இரண்டாம் கட்ட, 'மெகா கேம்பஸ்' முகாம், செப்., இறுதி வாரம் நடக்கிறது. இதற்கான விண்ணப்ப பதிவுகள் துவங்கி உள்ளன. வரும், 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பின், விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, செப்., இறுதி வாரத்தில் முகாம் துவங்க உள்ளது. இதற்கு, ஆன்லைன் எழுத்துத் தேர்வு கட்டாயமக்கப்பட்டு உள்ளது.
சென்னை, கிண்டி இன்ஜி., கல்லுாரி, எம்.ஐ.டி., கல்லுாரி மற்றும் அழகப்ப செட்டியார் தொழில்நுட்ப கல்லுாரிகளின் கணினி ஆய்வகங்களில் இந்த தேர்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப தேர்வு, சிந்தனைத்திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டு, பணி வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன.இதில், இன்போசிஸ், டி.சி.எஸ்., மற்றும் காக்னிசன்ட் நிறுவனங்கள் மட்டும், பல ஆயிரம் மாணவர்களுக்கு பணி வாய்ப்புகளை அளிக்க உள்ளன.