ஒரு ரூபாய்க்கு ஒரு ஜிபி: புதிய திட்டத்தை அறிமுகம் செய்யும் பிஎஸ்என்எஸ்
நாடு முழுவதும் சுமார் ஒரு ரூபாய்க்கு ஒரு ஜிபி தகவல்களைப் பெறும் புதிய திட்டம் (இன்டர்நெட் டேட்டா) பிஎஸ்என்எல் வெள்ளிக்கிழமை (செப்.9) முதல் அறிமுகப்படுத்த உள்ள
து
.இதுகுறித்த விவரம்: வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையிலான புதிய திட்டங்களை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தி வருகிறது.
அவ்வகையில், நகரங்கள், கிராமங்கள் ஆகிய பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், "அன்லிமிடெட் வயர்லைன் பிபி 249' எனும் புதிய அகண்ட அலைவரிசை திட்டத்தை செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தபட உள்ளது. அதன்படி, பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் வரையில்லாத (அன்லிமிடெட்) ஒரு ஜிபிக்கும் அதிகமான தகவல்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதோடு, இந்தத் திட்டம் 2 எம்பிபிஎஸ் வேகத்தில் தகவல்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
6 மாதத்துக்கு..: இந்தத் திட்டத்தைப் பயன்படுத்த தொடங்கியதிலிருந்து மாதத்துக்கு 300 ஜிபி தகவல்களை ரூ.249-க்கு வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம். அதன்படி, ஒரு ஜிபி-க்கான பதிவிறக்க கட்டண செலவு ரூ.1-க்கும் குறைவாகவே பிஎஸ்என்எல் வழங்க உள்ளது. ஆறு மாதத்துக்கு பிறகு, வாடிக்கையாளர்கள் ஏதேனும் ஒரு அகண்ட அலைவரிசை திட்டத்துக்கு மாறிக்கொள்ளலாம்.
மேலும், இதுதொடர்பாக பிஎஸ்என்எல் நிர்வாக இயக்குநரும், தலைவருமான அனுபம் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது: பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனம் மட்டுமே மிகவும் குறைந்த கட்டணத்தில் ஒரு ரூபாய்க்குள் ஒரு ஜிபி தகவல் அளிக்கும் சேவையை அளிக்க உள்ளது. மேலும், இந்த புதிய திட்டம் வாடிக்கையாளர்களை கவரும் வகையிலும், அதிகரிக்கவும் வழிவகை செய்யும் என்றார் அவர்.
புதிய வாடிக்கையாளர்கள் இந்த பிபி-249 திட்டத்தை பிஎஸ்என்எல் விற்பனை மையங்களில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, 18003451500 என்ற கட்டணமில்லா இலவச எண்ணிலும் www.bsnl.co.in என்ற இணையதள முகவரியிலும் தெரிந்துகொள்ளலாம் என பிஎஸ்என்எல் தமிழ்நாடு தொலைப்பேசி வட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.