நூற்றுக்கு நூறு எடுத்தால் பரிசு : அமைச்சர் வளர்மதி அறிவிப்பு
''பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் விடுதிகளில், தங்கி படிக்கும் மாணவ, மாணவியர், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண்
எடுக்கும் பாடங்களுக்கு, தலா, 1,000 ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்,'' என, இத்துறை அமைச்சர் வளர்மதி தெரிவித்தார்.
சட்டசபையில், நேற்று அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில், 290 கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், இரண்டு நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாகவும்; இரண்டு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாகவும், ஒரு கோடி ரூபாய் செலவில், நிலை உயர்த்தப்படும்
பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலனுக்காக, 1,338 விடுதிகள் செயல்படுகின்றன. இவற்றில், 1,112 பள்ளி விடுதிகள்; 226 கல்லுாரி விடுதிகள். இவற்றில் தங்கி, 10ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் கல்லுாரிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி, எட்டு லட்சம் ரூபாய் செலவில் நடத்தப்படும்
கல்லுாரி விடுதிகளில் படிக்கும் மாணவ, மாணவியரின், ஆங்கிலப் பேச்சாற்றல் மற்றும் தனித்திறனை வளர்க்க, இரண்டு கோடி ரூபாய் செலவில், பயிற்சி அளிக்கப்படும்
விடுதிகளில் புதிதாக சேரும் மாணவ, மாணவியருக்கு, பாய்களுக்கு பதிலாக, 25 லட்சம் ரூபாய் செலவில், ஜமக்காளம் வழங்கப்படும்
விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் எடுக்கும் மாணவ, மாணவியருக்கு, ஒவ்வொரு பாடப்பிரிவிற்கும், தலா, 1,000 ரூபாய் சிறப்பு ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.