முதுநிலை டிப்ளமோ, பல் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளை நடத்துகிறது என்பிஇ
முதுநிலை டிப்ளமோ, முதுநிலை பல் மருத்துவம் (எம்டிஎஸ்) ஆகிய படிப்புகளுக்கான தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வினை (நீட்) தேசிய மருத்துவ தேர்வு வாரியம் (என்பிஇ) நடத்தவுள்ளது
.
இதுதொடர்பாக, அந்த வாரியம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
2017-ஆம் ஆண்டுக்கான முதுநிலை டிப்ளமோ மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள், நாடு முழுவதும் 41 நகரங்களில் உள்ள 86 தேர்வு மையங்களில், வரும் டிசம்பர் 5-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.
கணினி வாயிலாக நடைபெறும் இந்தத் தேர்வுகளில் எம்.பி.பி.எஸ். மருத்துவப் பாடத்திட்டத்தில் இருந்து 300 கேள்விகள் இடம்பெறும். இதேபோல், முதுநிலை பல் மருத்துவப் படிப்புக்கான (எம்டிஎஸ்) நுழைவுத் தேர்வுகள், அதே மையங்களில், வரும் நவம்பர் 30-ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.
முதுநிலை பல் மருத்துவம், முதுநிலை டிப்ளமோ ஆகிய படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளை எழுத விரும்புவோர், வரும் 26-ஆம் தேதி முதல் அக்டோபர் 31-ஆம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி, சண்டீகரில் உள்ள பிஜிமர் மருத்துவக் கல்லூரி, ஜிப்மர் மருத்துவக் கல்லூரி, தேசிய மனநல கல்வி நிறுவனம் ஆகிய கல்லூரிகள், முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு வரம்பில் வராது.
இதேபோல், எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி, தில்லி பல் மருத்துவக் கல்வி நிறுவனம் ஆகியவை முதுநிலை பல் மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு வரம்பில் வராது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.