ரிலையன்ஸ் 'ஜியோ' அறிமுகத்தால் பரபரப்பு : மொபைல் போன் கட்டணம் அதிரடியாக வீழ்ச்சி


     ரிலையன்ஸ் நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்துள்ள, 'ஜியோ' மொபைல் போன் சேவையில், அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளதால், போட்டி நிறுவனங்கள் கலங்கிப் போய், விலை குறைப்பு நடவடிக்கையை துவங்கி உள்ளன. 'ஜியோ' இணைப்புகளை வாங்க, வாடிக்கையாளர்கள்
முட்டி மோதுகின்றனர்.


 'சிம்' கார்டுகள் : ரிலையன்ஸ் நிறுவனத்தின், 'ஜியோ' மொபைல் போன் சேவை, நாடு முழுவதும் வர்த்தக ரீதியாக நேற்று துவங்கியது. முன்னதாக, அந்நிறுவன ஊழியர்களுக்கு மட்டும் சோதனை அடிப்படையில், 'சிம் கார்டுகள்' தரப்பட்டன. பின், ரிலையன்ஸ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பு மொபைல் போன்களை வாங்குவோருக்கு, டிசம்பர் வரையிலான அழைப்புகள், எஸ்.எம்.எஸ்., மற்றும் 'இன்டர்நெட் டேட்டா' சேவைகள், இலவசம் என அறிவிக்கப்பட்டது.
சேவை பற்றிய அதிகாரப்பூர்வ தகவலை, செப்., 1ல், முகேஷ் அம்பானி வெளியிட்டதும், ஒரே நாளில் போட்டி நிறுவனங்களின் பங்கு மதிப்பு, 5,000 கோடி ரூபாய்க்கும் மேல் வீழ்ச்சி அடைந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த போட்டி நிறுவனங்கள், 'டிராய்' அமைப்பிடம் புகார் தெரிவித்தன. டிசம்பர், 31 வரை அழைப்புகள் இலவசம் என, அறிவிக்கப்பட்டிருந்தாலும், அந்த காலம் முடிந்ததும், 'எஸ்.டி.டி., லேண்ட் லைன், மொபைல்போன் உள்ளிட்ட அனைத்து அழைப்புகளும் எப்போதும் இலவசம்.
நெட்டுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. இதனால், 'ஜியோ'வின் இலவச, 'சிம்'களுக்கு, வாடிக்கையாளர்களிடையே கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. அதை வாங்க, வாடிக்கையாளர்கள் முட்டி மோதும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதைப் பார்த்து சுதாரித்த,'ஏர்டெல்' நிறுவனம், 'பிரீ -பெய்டு, இன்டர்நெட் டேட்டா' விலையை அதிரடியாக குறைத்துள்ளது. 'ஒரு ஜி.பி.,டேட்டா'வை, 265 ரூபாய்க்கு, 28 நாள் வேலிடிட்டியுடன் தந்த ஏர்டெல் நிறுவனம், நேற்று முதல், ஒரு ஜி.பி., '3ஜி, 4ஜி' டேட்டா'வை, 193 ரூபாய்க்கு தர துவங்கி உள்ளது. '2 ஜி.பி., பகல் மற்றும் இரவு டேட்டா பேக்கேஜின்' விலையை, 295 ரூபாயில் இருந்து, 228 ரூபாயாக குறைத்துள்ளது.
புதிய சலுகை : பொதுத்துறை நிறுவனமான, பி.எஸ்.என்.எல்., ஒரு படி மேலே போய், மாதம், 300 ஜி.பி., வரை பயன்படுத்தும், 'பிராட்பேண்ட் இன்டர்நெட்' வாடிக்கையாளர்களுக்கு, 'ஒரு ஜி.பி.,' ஒரு ரூபாய்க்கு குறைவாக இருக்கும் வகையில், புதிய சலுகையை, வரும், 9ம் தேதி முதல் அளிக்க உள்ளது. இது வெறும் ஆரம்பம் தான்; இதுபோன்ற பல சலுகைகளை மற்ற நிறுவனங்களும் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலை குறைப்பு சாத்தியமா? :பொதுவாக, இன்டர்நெட் டேட்டாவுக்கு, 'பேக்கெட் சுவிட்ச்' மற்றும் குரல் அழைப்புகளுக்கு, 'சர்க்கியூட் சுவிட்ச்' என்ற தொழில்நுட்பங்களை, மொபைல் போன் நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. ஆனால், 'ஜியோ'வில், அவை இரண்டிற்கும், 'பேக்கெட் சுவிட்ச்' என்ற தொழில்நுட்பமே பயன்படுத்தப்படுகிறது.
'வி.ஓ.எல்.டி.இ., என்ற நவீன தொழில்நுட்பம் காரணமாக, ஒரு யூனிட் டேட்டா மூலம் கிடைக்கும் பயன், மற்ற நிறுவனங்களை விட அதிகமாக இருக்கும். இதற்கான கட்டமைப்பை பிரம்மாண்டமாக அமைத்துள்ளதால் விலை குறைவாக தர முடிகிறது. எதிர்காலத்தில், '5ஜி, 6ஜி' என, விரிவு படுத்துவதும் எளிதாகும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)