மருத்துவ கல்லூரியில் சேர பெருந்தொகை கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை !
மருத்துவ கல்லூரியில் சேர பெருந்தொகை கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை வருமான வரித்துறை ஆணையருக்கு ஐகோர்ட்டு உத்தரவு!!
சென்னை,
மருத்துவ கல்லூரியில் சேர பெருந்தொகை கொடுத்தவர்களின் விவரங்களை சேகரித்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வருமான வரித்துறை ஆணையருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மோசடி வழக்கு
சென்னை திருவான்மியூரை சேர்ந்த எஸ்.கே.துரைராஜ் என்பவர் ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அதில், தனியார் மருத்துவ கல்லூரியில் படிப்பதற்கு இடம் வாங்கித்தருவதாக கூறி ரூ.20 லட்சம் வாங்கி மோசடி செய்ததாக, என் மீது பட்டினப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்கவேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்று வாதிடப்பட்டது. இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
முன்ஜாமீன் மறுப்பு
லஞ்சம் வாங்கியவரை மட்டும் குற்றம் சொல்லி தண்டிக்க கூடாது. லஞ்சம் வாங்கியவருக்கு இணையான குற்றத்தை லஞ்சம் கொடுத்தவர்கள் செய்துள்ளனர். எனவே, அவர்கள் மீதும் தவறு உள்ளது.
அதேபோல, மருத்துவ படிப்பில் சேருவதற்கு மதிப்பெண் தேவையில்லை. பணம் மட்டும் தான் தேவை, தகுதி என்ற சூழ்நிலை நிலவுகிறது. இவ்வாறு பணம் கொடுத்து படித்த டாக்டர்களிடம், சிகிச்சை பெறும் அப்பாவி நோயாளிகளின் நிலை என்னவாகும்? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
சட்டப்படி நடவடிக்கை
இதுபோன்ற செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரமாக செயல்பட வேண்டும். மருத்துவ கல்வியில் சேர பெருந்தொகையை லஞ்சமாக கொடுத்த நபர்களின் விவரங்களை சேகரித்து, அவர்கள் எந்த வழியில் இந்த தொகையை பெற்றனர்? என்பதை கண்டறிய வேண்டும். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தீர்ப்பின் நகலை வருமான வரித்துறை ஆணையருக்கு ஐகோர்ட்டு பதிவுத்துறை அனுப்பிவைக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்