ஊதியம் பிடித்தம் ஆசிரியர்கள் அதிர்ச்சி
சிவகங்கை: ஆசிரியர்களின் ஆக., மாத ஊதியத்தில் எவ்வித முன்னறிவிப்புமின்றி ரூ.150 வரை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு இ.சி.எஸ்., முறையில் ஊதியம் வழங்கப்படுகிறது. தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்களில் பலருக்கு ஆக., மாத ஊதியத்தில் ரூ.150 வரை பிடித்தம் செய்யப்பட்டது. குழப்பம் அடைந்த ஆசிரியர்கள் உதவித்தொடக்க கல்வி அலுவலகத்தை அணுகினர்.
அவர்களுக்கும் பணம் பிடித்த விபரம் தெரியவில்லை. கருவூல அதிகாரிகளிடம் விசாரித்தபோது அஞ்சலக காப்பீட்டு திட்டத்தில் பணம் செலுத்துவோரிடம் சேவை வரி பிடித்தம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
எந்தவித முன்னறிவிப்புமின்றி கருவூல அதிகாரிகள் பணம் பிடித்தம் செய்ததற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டி கூறியதாவது: சம்பளம் பெற்று தரும் அலுவலர்களான உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கே பணம் பிடிக்கப்பட்டது குறித்து தெரியவில்லை. இதனால் தேவையில்லாத குழப்பம் ஏற்பட்டது. பணம் பிடித்தம் செய்வது குறித்து இனிவரும் காலங்களில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும், என்றார்.