பள்ளிகல்வியில் காலியிடம் அதிகரிப்பு
இணை இயக்குனர் முதல் அலுவலக உதவியாளர் வரை காலியிடங்கள் அதிகரித்துள்ளதால், பள்ளிக்கல்வி துறையினர் நிர்வாக பணிகளில் திணறி வருகின்றனர்.
தமிழக பள்ளிக்கல்வி துறையில், மேல்நிலைப் பிரிவு இணை இயக்குனராக இருந்த பழனிச்சாமி, இயக்குனராக பதவி உயர்வு பெற்று, முறைசாரா கல்வி பிரிவுக்கும், பணியாளர் பிரிவு இணை இயக்குனரான கருப்பசாமி, இயக்குனராக பதவி உயர்வு பெற்று, மெட்ரிக் இயக்குனரகத்துக்கும் மாற்றப்பட்டனர்.
இவர்களின் பதவி உயர்வால், காலியான இரண்டு இணை இயக்குனர் பணியிடங்களுக்கும், மூன்று மாதங்களாக புதியவர்கள் நியமிக்கப்படவில்லை.இடைநிலை பிரிவு இணை இயக்குனர் நரேஷ் மற்றும் தொழிற்கல்வி பிரிவு இணை இயக்குனர் பாஸ்கர சேதுபதி ஆகியோர், இரண்டு பொறுப்புகளையும், மூன்று மாதங்களாக கூடுதலாக கவனித்து வருகின்றனர்.
பள்ளிக்கல்வி அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில், ஆயிரக்கணக்கில் உதவியாளர், அலுவலக பணியாளர் இடங்களும் காலியாக உள்ளதால், பள்ளிக் கல்வியின் மற்ற துறை ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டு, பெரும்பாலான பணிகள் முடங்கி உள்ளன.
இதுகுறித்து, தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க தலைவர் சாமி.சத்தியமூர்த்தி கூறுகையில், ''காலியாக உள்ள அதிகாரிகள், ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்பாததால், கல்வித்துறையில் குறித்த நேரத்திற்குள் முடிய வேண்டிய பணிகள் தாமதமாகின்றன. அந்தந்த பதவிக்குரிய ஆட்களை நியமித்தால் தான் குழப்பம் தீரும்,'' என்றார்.