உயர் கல்விக்கான மண்டல மையமாக இந்தியா உருவெடுக்கும்


          வரும் 2030-ஆம் ஆண்டில், உலக அளவில் உயர் கல்விக்கான மண்டல மையமாக இந்தியா உருவெடுக்கும் என மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை இணையமைச்சர் விஜய்கோயல் தெரிவித்தார்.


         ஸ்ரீபெரும்புதூரில், இளைஞர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையத்தை திறந்து வைத்தபோது, இவ்வாறு அவர் கூறினார். 

ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் ரூ. 40 கோடியில் 30 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்ட இளைஞர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையம், கண்காட்சி வளாகத் திறப்பு விழாவும், முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
இதில், மத்திய அமைச்சர் விஜய்கோயல் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பயிற்சி மையத்தையும், கண்காட்சி வளாகத்தையும் திறந்து வைத்தார்.
விழாவுக்கு, ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தின் இயக்குநர் லதா பிள்ளை தலைமை வகித்தார்.மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை செயலாளர் ராஜீவ் குப்தா முன்னிலை வகித்தார்.
இதைத் தொடர்ந்து, ராஜீவ் காந்தி இளைஞர் மேம்பாட்டு மையத்தின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 
இதில், அமைச்சர் விஜய்கோயல் கலந்துகொண்டு 163 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.அப்போது, அவர் பேசியதாவது: 
அனைத்துத் துறைகளிலும் உயர் கல்வி பயில, மாணவர்களை ஊக்குவிப்பதே மத்திய அரசின் முக்கிய நோக்கமாகும்.இளைஞர்களின் வாழ்வியலை மேம்படுத்த, அவர்களின் திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கு ஏற்ப கல்விக் கொள்கைகளை மத்திய அரசு மாற்றி வருகிறது.உயர் கல்வியில் கட்டமைப்பு வசதிகள் இல்லாததும், ஆராய்ச்சி நிலையங்கள் இல்லாததும் முக்கிய பிரச்னையாக உள்ளது. 
அனைத்து மாணவர்களும் உயர் கல்வி கற்க வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும்.இந்நிலையில், இளைஞர்கள் திறன் மிக்கவர்களாக உருவாகும் வாய்ப்பை அரசு வழங்கி வருகிறது.வரும் 2030-ஆம் ஆண்டில், உலக அளவில் உயர் கல்விக்கான மண்டல மையமாக இந்தியா உருவெடுக்கும்.அதேபோல், 2030-ஆம் ஆண்டில் உலக அளவில் அதிகமான வேலைவாய்ப்பு பெறும் இளைஞர்களாக இந்திய இளைஞர்கள் இருப்பார்கள் என்றார். 
பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பின்போது, பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு மத்திய அரசு வேலை வழங்குமா என்ற கேள்விக்கு, பொறுத்திருந்து பாருங்கள் என விஜய்கோயல் பதிலளித்தார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank