அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், பல்வேறு தொழில் நிறுவனங்களை உள்ளடக்கிய, ‘டை’ கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது.
அதில், கூட்டமைப்பின் மத்திய கிழக்கு பிரிவு தலைவரும், பிசோபிட் நிறுவனருமான, பாலா பலமடய் பேசுகையில்,‘இந்தியா, தற்போது, புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் டிஜிட்டல் செயல்பாடுகளின் மையமாக, உலக நாடுகளால் பார்க்கப்படுகிறது’ என்றார்.
சிகாகோவின் இந்திய துணை துாதர், அவுசப் சயீத் கூறுகையில்,‘‘பொருளாதார வளர்ச்சிக்கும், தொழில் முனைவோரை ஊக்குவிக்கவும், பிரதமர் மோடி அறிவித்த, ‘டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட் அப்’ இந்தியா திட்டங்கள், சிறப்பான பலனை அளிக்கத் துவங்கியுள்ளன. ஏராளமான தொழில் முனைவோரை, ஸ்டார்ட் அப் திட்டம் உருவாக்கியுள்ளது. அதிகமான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ள நாடுகளில், இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது,’’ என்றார். கூட்டத்தில் பங்கேற்ற தொழில் அதிபர்கள், ‘இந்தியாவில் டிஜிட்டல் புரட்சி நடைபெற்று வருகிறது’ என, பாராட்டு தெரிவித்தனர்.