அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்த வியூகம்!


        மாநில கல்வி இயக்குனரின்,&'ரகசிய கண்காணிப்பு குழு&' அமைக்கும் அறிவிப்பால், ஓபி அடிக்கும் ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். 


         சமவெளி பிரதேசங்களை ஒப்பிடுகையில், நீலகிரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய, அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவு. குறிப்பாக, ஊரகப் பகுதிகளில் செயல்படும் பல ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில், சொற்ப அளவிலான ஆசிரியர்களே உள்ளனர்.


ஓபி அடிக்கும் ஆசிரியர்கள்

பள்ளிகள் மற்றும் மாணவர்களின் மீது தனி அக்கறை, ஆர்வம், நேரம் கருதாமல் பணியாற்றுவது போன்ற சேவை மனப்பான்மை கொண்ட தலைமையாசிரியர், ஆசிரியர்களால் மட்டுமே, சில ஊராட்சிப் பள்ளிகள் &'பெயர் சொல்லும்&' பள்ளிகளாக உள்ளன. ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் கணக்கு காண்பிக்கவே, ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வந்து செல்கின்றனர்; வெறுமனே &'ஓபி&' அடித்தும் செல்கின்றனர்.

ஊராட்சி ஒன்றிய, அரசு, உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியரின் கல்வித் தரம், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் பணிகளை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே செய்து வரும் நிலையில், அவர்களது செயல்பாடுகளிலும் திருப்தியில்லை என்ற புகார், அரசின் கவனத்துக்கு சென்றிருக்கிறது.

வருகிறது கண்காணிப்பு குழு

இதன் விளைவாக, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள், உதவி, கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர்கள், நர்சரி தொடக்கக் கல்வி அலுவலர்கள், ஆசிரியப் பயிற்றுனர்களை உள்ளடக்கி குழு அமைக்க, தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

ஒரு குழுவில், இரு உறுப்பினர்கள் உள்ளவாறு பிரித்துக் கொண்டு, முன்னறிவிப்பின்றி, பள்ளிகளை பார்வையிட வேண்டும். தொடர்ந்து புகாருக்கு உள்ளாகும் பள்ளிகள், கல்வித் தரத்தில் பின்தங்கிய பள்ளிகளை கண்காணிப்பதில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பணிகள் வரையறை

ஆசிரியர்கள், குறித்த நேரத்திற்கு வந்து, பணி நேரம் முழுக்க பள்ளிகளில் உள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும். தமிழ், ஆங்கில வாசிப்பு, எழுதும் திறன், கணித அடிப்படை செயல்பாடுகளில் மாணவர்களின் முன்னேற்றம் குறித்து சோதித்தறிய வேண்டும். குறிப்பாக, 6, 8 படிக்கும் மாணவ, மாணவியரின் தமிழ், ஆங்கில, கணக்குப் புலமையை பரிசோதிக்க வேண்டும்.

பள்ளி நுாலக செயல்பாடுகளை கண்காணித்து, மாணவர்களை, துணைப்பாட புத்தகங்களை வாசிக்கச் செய்ய வேண்டும். மாணவர்களுக்கு புத்தகம், நோட்டுப்புத்தகம், காலனி, புத்தகப்பை, கிரையான், கலர் பென்சில், கணக்கு உபகரணப் பெட்டி, கம்பளிச் சட்டை, பஸ் பாஸ் போன்றவை வழங்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்த வேண்டும்.

பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கற்றல், கற்பித்தல் உபகரணங்கள், ஆங்கில உச்சரிப்பு சார்ந்த சிடிக்கள், லேப்டாப் மற்றும் கணக்கு உபகரணப் பெட்டி போன்றவை, முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.

பள்ளியில் உள்ள கழிப்பறை, தண்ணீர் வசதி; மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு, பராமரிப்பு உள்ளதா என, உறுதி செய்ய வேண்டும் என்பன, போன்ற பணிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

ஆய்வில் குறை தென்பட்டால், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் மூலம், எஸ்.எஸ்.ஏ., முதன்மைக் கல்வி அலுவலரின் கவனத்துக்கு கொண்டு சென்று, நிவர்த்தி செய்ய வேண்டும் எனவும், கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மூலம், துவக்கப் பள்ளிகளின் கல்வித் தரம் உயருமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022