குழந்தை ஆங்கிலம் பேசத் தயங்குகிறதா? கூச்சம் போக்கும் 10 டிப்ஸ்!
ஒரு குழந்தையை ஐந்து, ஆறு வயதுவரை தாய்மொழியிலேயே பேசிப் பழக்கும்போது, அது மனதில் ஆழமாக தங்கிவிடும். அதன்பின் எளிதாக பேசுவார்கள்.
அதன்பிறகு, இன்னொரு மொழியையும் கற்றுக்கொள்வதும் அவசியமாகிறது.
அதில் பலரின் தேர்வு ஆங்கிலமாவே இருக்கிறது.
தங்கள் பிள்ளைகள், அழகாகவும் சரியாகவும் ஆங்கிலம் பேசவேண்டும் என்று ஆசைப்படாத பெற்றோர்களே இல்லை என்றே சொல்லலாம்.
அதற்காக ஸ்போக்கன் இங்கிலிஸ் புக்ஸ் வாங்கித் தருவது கிளாஸ்க்கு அனுப்புவது என பலவித முயற்சிகளையும் எடுப்பார்கள். ஆனாலும் பல பிள்ளைகள் ஆங்கிலத்தில் உரையாடத் திணறுவதைப் பார்க்க முடியும். அதற்கு முதல் காரணம் தவறாக பேசிவிடுவமோ என்கிற பயமே. தவறு என்பது சரியாக செய்ய உதவும் நண்பன் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கே இருக்கிறது. அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என, ஆங்கில ஆசிரியர் ஶ்ரீ.திலிப் கூறும் டிப்ஸ்கள் இதோ:
1. குழந்தைகள் ஆங்கிலத்திலேயே வாக்கியங்களை அமைத்து பேசுவது தொடக்க நிலையில், சிரமமான ஒன்று. அதனால், அவர்கள் தமிழில் பேசுகின்ற வாக்கியங்களுக்கு, இணையான ஆங்கில வாக்கியங்களைப் பேசப் பழக்குங்கள்.
உதாரணமாக: "அம்மா! இங்கே வா!" என்பதை "Mother come here" என்று சொல்ல வைக்கலாம்.
2. வீட்டில் பேசும்போது, சின்னச் சின்ன வாக்கியங்களைப் பேச பழக்கப்படுத்துங்கள். காலையில் டிபன் சாப்பிடும்போது, உங்கள் மகன்/மகள் பூரியை விரும்பி சாப்பிடுகிறார் என்றால், I like puri.. என்று சொல்ல வைத்து, 'நீ எதையெல்லாம் விரும்புகிறாயோ அதையெல்லாம் 'பூரி' என்ற சொல்லை எடுத்துவிட்டு பேசு' எனச் சொல்லுங்கள். ஏதேனும் தவறாக சொன்னால் மாற்றிச் சொல்லப் பழக்குங்கள்.
3.காலையில் எழுந்ததும் 'Good morning' என்று வீட்டில் உள்ள அனைவருக்கும் சொல்வதை வழக்கமாக்குங்கள். நீங்கள் சொல்வதைப் பார்க்கும் பிள்ளைகள் அதேபோல பேசத் தொடங்குவார்கள். பிறகு, Have a nice day" போன்ற வாழ்த்துகளும், பிறந்த நாள் வீட்டுக்குச் செல்லும்போது ஆங்கிலத்தில் வாழ்த்துகள் சொல்ல, வீட்டிலேயே சின்னதாக ஒத்திகைப் பார்த்துவிட்டுச் செல்லலாம். உங்கள் அலுவலகத்தில் ஏதேனும் முக்கியமான மீட்டிங்க்கில் கலந்துகொள்ளப் போகிறீர்கள் என்றால் அதை உங்கள் பிள்ளையிடம் கூறி, ஆங்கிலத்தில் வாழ்த்தச் சொல்லுங்கள்.
4. கேள்விக்கு பதில் சொல்வது என்பதை மாற்றி, பதிலை நீங்கள் கூறி இதற்கு என்ன கேள்வி கேட்கப்பட்டிருக்கும் என யூகிக்கச் செய்யுங்கள். அதையும் எளிமையான உதாரணங்களிலிருந்தே தொடங்குங்கள்.
"I am 40 years old" என்ற பதிலை இன்று நான் ஒருவரிடம் சொன்னேன். அப்படியென்றால் என்னிடம் என்ன கேட்டிருப்பார்கள் எனக் கேட்கலாம்.
5. பிள்ளைகளை வெளியில் அழைத்துச் செல்லும்போது அங்கு பார்க்கும் பொருட்களுக்கான ஆங்கிலப் பெயர்களைக் கூறுங்கள். காய்கறி கடைக்குச் சென்றால் ஒவ்வொரு காய்கறியின் ஆங்கிலப் பெயரையும் சொல்லுங்கள். வீடு திரும்பும்போது என்னவெல்லாம் வாங்கினோம் என்பதை செக் பண்ணும் விதமாக, காய்கறியின் பெயரை நீங்கள் தமிழில் சொல்ல, பிள்ளை ஆங்கிலத்தில் சொல்லுமாறு விளையாட்டைப் போல செய்யுங்கள். இது அவர்களின் ஆங்கிலச் சொல் வங்கியை அதிகரிக்கும். ஆங்கிலத்தில் பேசுவதற்கு இது மிகவும் முக்கியம்.
6. பிள்ளைகளின் பழக்கங்களை வைத்து ஒரு பட்டியல் தயாரிக்கலாம். தன்னால் எதெல்லாம் முடியும் என்பதை சொல்ல வைக்கலாம்.
I can ..........
பிள்ளைகள் தங்களால் முடியும் என நினைக்கிற விஷயங்களால் நிரப்ப வேண்டும்.
7. இரவில் தூங்கும்முன் கதைகள் கேட்கும் பழக்கம் பல குழந்தைகளுக்கும் இருக்கும். அந்த நேரத்தில், ஆங்கிலத்தில் Bed time stories சொல்லலாம். கதையின் வழியாக ஆங்கிலச் சொற்களைக் கேட்கும்போது, அதற்கான அர்த்தங்களை எளிதாக புரிந்துகொள்வார்கள். உரையாடும் தன்மையும் அதிகரிக்கும்.
8. Bed time stories கேட்டுப் பழகிய குழந்தைகளுக்கு சின்னச் சின்ன கதைகள் கொண்ட புத்தகங்களைப் படிக்க வைக்கலாம். இது வாசிப்பு பழக்கத்தையும் அதிகரிக்கும். நீங்களும் அந்தக் கதையைப் படித்து, கதையில் இருக்கும் கதாபாத்திரங்களாக பேசிப் பழகலாம். உதாரணமாக... கதையில் யானை காட்டுக்குள் தன் குட்டியைத் தேடி, பல விலங்குகளிடம் கேட்டுக் கண்டுபிடிக்கும் கதை எனக் கொண்டால், யானையாக உங்கள் பிள்ளையும் சந்திக்கும் விலங்குகளாக நீங்களும் உரையாடலாம்.
பார்த்துக் கண்டுபிடிக்கிறார்கள் என்பதை ஒரு விளையாட்டாக ஆடுங்கள். பிறகு அந்த வார்த்தையைக் கொண்டு வாக்கியங்களை உருவாக்குங்கள்.
10. இறுதியானதுதான் மிக முக்கியமானது. தவறு என்பது எல்லோருமே செய்யக் கூடியதுதான். அதிலும் கற்றல் நிலையில் இருப்பவர்கள் பல தவறுகளைச் செய்வார்கள். உங்கள் குழந்தையும் ஆங்கிலத்தில் பேசும்போது தவறாக பேசிவிட்டால், கிண்டல் செய்வதுபோல சிரித்துவிடாதீர்கள். மேலும் 'இதுகூட தெரியவில்லையா' என்றோ, 'இதுவே சொல்லத் தெரியவில்லை என்றால் இன்னும் எவ்வளவு இருக்கிறது அதையெல்லாம் எப்படித்தான் பேசப் போகிறாயோ' என 'நெகட்டிவ்' வார்த்தைகளைத் தவறியும் சொல்லிவிடாதீர்கள். அப்படிச் சொல்லவிட்டால் அதுவே ஆங்கில உரையாடலை பெரிய அளவில் பாதிக்கும்.