‘ஜிசாட்–18’ செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது
பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏரியன்–5 ராக்கெட் மூலம் ‘ஜிசாட்–18’ செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கைகோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்காக பி.எஸ்.எல்.வி. ஜி.எஸ்.எல்.வி. ஆகிய இருவகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது.தகவல்தொடர்பு, கடல்சார் ஆராய்ச்சி, வானிலை பயன்பாட்டுக்காக பல்வேறு விதமான செயற்கைகோள்களை இஸ்ரோ வடிவமைத்து ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்வெளிக்கு செலுத்தி வருகிறது.ஏரியான்–5 ராக்கெட் ஏவப்பட்டது.
அந்தவகையில் ஒரு சில தொலைத்தொடர்பு செயற்கைகோளை பிரெஞ்சு கயானாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவி வருகின்றனர். தற்போது தொலைத்தொடர்பு தகவல்களை துல்லியமாக தெரிந்துகொள்வதற்காக அதிநவீன வசதிகள் கொண்ட ஜிசாட்–18 என்ற செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்திருந்தது.இந்த செயற்கைகோள் பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரெஞ்சு கயானாவிலுள்ள ‘கொரு’ ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏரியான்–5 ராக்கெட் மூலம் இன்றுஏவப்பட்டது.
தொலைத்தொடர்பு செயற்கைகோள்
இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:–
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையின் சி–பேண்ட் மற்றும் கியூ பேண்ட்களின் சேவையை வலுப்படுத்துவதற்காக 48 தொலைத்தொடர்பு டிரான்ஸ்பாண்டர்கள் இணைக்கப்பட்ட ஜிசாட்–18 என்ற அதிநவீன சக்தி கொண்ட 3 ஆயிரத்து 404 கிலோ எடைகொண்ட செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்திருந்தது. இந்த செயற்கைகோள் கடந்த 4–ந்தேதி (புதன்கிழமை) அதிகாலை 2 மணி அளவில் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு இருந்தது.ஆனால் மோசமான வானிலை, பலத்த காற்று வீசியதால் கடைசி நேரத்தில் ராக்கெட் ஏவும் திட்டம் கைவிடப்பட்டது.இன்று அதிகாலை வானிலை இயல்பு நிலைக்கு திரும்பியதும், அதிகாலை 2 மணி அளவில் ஏரியான்–5 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இந்த செயற்கைகோள் 15 ஆண்டுகள் செயல்படும் தன்மையை கொண்டது.தரைக்கட்டுப்பாட்டு நிலையம்
இந்த செயற்கைகோள் பூமியின் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டதும், அதன் முழு கட்டுப்பாடும் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹஸனில் உள்ள தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துக்கு வந்துள்ளது.தங்குதடையின்றி செயல்படுவதற்காக இந்த செயற்கைகோளில் சூரியஒளி தகடுகள் மற்றும் ஆன்டெனாக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினார்கள்.
பிரதமர் வாழ்த்து
ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்கு பிரதமர் நரேந்திரமோடி, இஸ்ரோ தலைவர் கிரண்குமாருக்கு அனுப்பிய வாழ்த்து செய்தியில், இந்தியாவின் தொலைத்தொடர்பு செயற்கைகோள் ஜிசாட்–18 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். விண்வெளி திட்டத்தில் இது மற்றொரு மைல்கல்லாகும்’ என்று அவர் கூறி உள்ளார்.