மாணவர்களுக்கான "2020 - கலாமின் கனவுகள்!" பற்றி கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிக்கான செய்திகள்.
அறிவுக்கும் திறமைக்கும் ஏற்ற வேலையை வெளிநாடுகள் தான் தருகின்றன என்று கூறி, விமானம் ஏறுகிறவர்கள் உள்ள காலத்தில்,
தாய்நாட்டு சேவைக்காகவே உறுதியுடன் இருந்து இந்தியாவிலேயே திறமையை வளர்த்துக் கொண்டு உலகத்தரத்துக்கு இந்தியா உயர்வதற்கு வழிகாட்டியவர், டாக்டர் அப்துல்கலாம்.
அவர் ஜனாதிபதியாவதற்கு முன்பே, வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்து கலாம் பணிபுரியும் விதத்தை பார்க்க நேர்ந்த பலர், ஏன் வெளிநாடு போனோம் என்று வெட்கித் தலைகுனிந்தோம் என்று கூறக் கேட்டிருக்கிறோம்.
1987-88ம் ஆண்டுகளில் கனடாவிலிருந்து இந்தியா வந்த வெளிநாடு வாழ் இந்திய விஞ்ஞானி, எம். வித்யாசாகர், தான் பார்த்த விதத்தை இப்படி பதிவு செய்துள்ளார், அப்துல் கலாம் தலைமையின் கீழ் பணிபுரிந்தவர்களைப் பார்க்கும் போது, வழக்கமான அரசு ஊழியர்களுக்கான எந்த அம்சத்தையும் காணோம்.
வேலை நேரம் முடிந்த பின்னரும், வார விடுமுறைகளிலும் பணிபுரிந்தார்கள். வேறு எங்கும் இதைக் காண முடியாது&' என்று வியந்து கூறினார். அப்போது அப்துல் கலாம்,இந்திய அரசின் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனத்தின் (டி.ஆர்.டி.ஓ.,) இயக்குனராக இருந்தார். நீங்கள் வேலை செய்வது புதிய ஸ்டைலாக&' இருக்கிறதோ என்று கேட்டபோது, நான் எனக்கு என்று எந்த ஸ்டைலையும் வைத்துக் கொள்ளவில்லை.
வேலை பார்க்கும் இடத்தில் தவறு செய்கிறவர்கள், தவறை ஒப்புக்கொள்கிறவர்களாக இருக்க வேண்டும். அதே சமயம் அந்த தவறிலிருந்து பாடம் கற்றுக் கொள்கிறவர்களாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
அறிவியல் ஆசான்
ஏவுகணைகளின் தந்தை என்று இவர் அழைக்கப்படுவதற்கு காரணம் அன்றைய அவரது கடின உழைப்பும் அதைத் தொடர்ந்து கிடைத்த வெற்றிகளும் தான். அவருடன் பணியாற்றியவர் எந்த பதவியில் இருந்தாலும், எந்த மதத்தை சேர்ந்தவராகஇருந்தாலும், எந்த குணத்தைக் கொண்டிருப்பவரானாலும் சமமாக பழகியவர், அவர்களுடைய விருப்பத்துக்கு மதிப்புக் கொடுத்தவர்.
விருதுகள்
தேசிய வடிவமைப்பு விருதுகள், டாக்டர் பிரேன் ராய் விண்வெளி விருது; ம.பி. அரசின் தேசிய நேரு விருது, 1994ல் இந்திய வானியல் சங்கம் வழங்கிய ஆர்யப்பட்டா விருது. 1996ல் பேராசிரியர் ஒய்.நாயுடம்மா நினைவு தங்கப்பதக்கம், ஜி.எம்.மோடி அறிவியல் விருது, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உன்னதத்துக்கான எச்.கே.பிரோடியா விருது உட்பட பற்பல விருதுகளை அப்துல்கலாம் பெற்றுள்ளார்.
1981ல் பத்மபூஷன் விருதும், 1996ல் பத்ம விபூஷன் விருதும் பெற்ற அப்துல்கலாம் 1997 டிசம்பரில் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதையும் பெற்றார். இந்திய வானியல் சங்கத்தின் துணைத் தலைவராகவும், இந்திய தேசிய பொறியியல் அகாடமி பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் அகாடமி, மின்னணு மற்றும் தொலைத் தகவல் தொடர் புக் கழகத்தின் ஆய்வாளராகவும் அப்துல் கலாம் திகழ்ந்தார்.
எழுதிய நுால்கள்
இந்தியா 2020, பொற்காலத்தை நோக்கி ஒரு பார்வை என்ற புத்தகத்தை இஸ்ரோவின் செயல் இயக்குனர் வி.எஸ்.ராஜனுடன் இணைந்து எழுதினார். இவரது சுயசரிதையை அக்னி சிறகுகள் என்ற தலைப்பில் எழுதியுள்ளார்.
இரண்டுமே ஆங்கிலத்தில் வெளி வந்தவை. 2002 ஜூலை 25ம் தேதி இந்தியாவின் 11வது ஜனாதிபதியாக பதவியேற்றார். 2007 ஜூலை 25 வரை அப்பதவியில் இருந்தார். அவரது பதவிக்காலத்தில் மக்களின் ஜனாதிபதி என அழைக்கப்பட்டார்.
மாணவர்களுக்கு அடிக்கடி கனவு காணுங்கள் என அறிவுறுத்துவார். ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய பின்பும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அவர் மறையும் வரை இந்த தேசத்துக்காக உழைத்துக் கொண்டே இருந்தார்.
கனவு காணுங்கள்
அப்துல் கலாமின் சில பொன் மொழிகள்:
கனவு காணுங்கள். அவற்றை நனவாக்ககடுமையாக உழைக்க வேண்டும். என்னால் முடியும்... நம்மால் முடியும்.. இந்தியாவால் முடியும் என்ற மந்திரத்தை சொல்லிக்கொண்டே இருங்கள்.
முதல் வெற்றியுடன் ஓய்வு எடுத்து விடாதீர். ஏனெனில் இரண்டாவது முயற்சியில் தோல்வி அடைந்தால், முதல் வெற்றி அதிர்ஷ்டத்தால்வந்தது என விமர்சிப்பர்.
மழை வந்தால் பறவைகள் எல்லாம் பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடையும். ஆனால் கழுகு மட்டும் வித்தியாசமாக சிந்தித்து,மேகத்துக்கு மேலே பறந்து மழையில் இருந்து தப்பிக்கும்.
அனைவருக்கும் ஒரே மாதிரியான திறமை கிடையாது. ஆனால், திறமையை வளர்த்துக் கொள்ள ஒரே மாதிரியான வாய்ப்புகிடைக்கிறது.
திருக்குறளில் ஈடுபாடு
திருக்குறளை அவர் தனது உரைகளில் மேற்கோளாக காட்டுவார். வேத, உபநிஷத்துக்களையும், மகாபாரதம், மனுஸ்மிருதி போன்றவற்றிலும் ஈடுபாடு காட்டியவர். 2002ம் ஆண்டில் பதவியிலிருந்த பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி அரசு, இவரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்த போது, அரசியல் பேதமின்றி பெரும்பாலான கட்சிகளால் அவர் ஏற்றுக் கொள்ளப்பட்டார்.
2020ம் ஆண்டில் இந்தியா வல்லரசாக வேண்டும் என்ற அவரது நீண்ட நாள் கனவை, இளைய சமுதாயத்தின் கனவாக மாற்ற வேண்டும்