குழந்தைகளின் பெற்றோருக்கு 4 வாரத்தில் இழப்பீடு வழங்கவேண்டும் தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு!
!
கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பலியான குழந்தைகளின் பெற்றோருக்கு 4 வாரத்துக்குள் இழப்பீடு
தொகையை வழங்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
குழந்தைகள் பலி
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா மற்றும் சரஸ்வதி தொடக்கப்பள்ளிகளில் கடந்த 2004–ம்
ஆண்டு தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக இறந்தனர். 18 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.
தீயில் கருகி இறந்த குழந்தைகளின் பெற்றோருக்கும், படுகாயமடைந்த குழந்தைகளுக்கும் உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பெற்றோர் சங்கத்தின் செயலாளர் கே.இன்பராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஐகோர்ட்டு ஓய்வுப்பெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்து, இழப்பீடு நிர்ணயம் செய்ய உத்தரவிட்டது.
இழப்பீடு நிர்ணயம்
அதன்படி, நீதிபதி வெங்கட்ராமன் ஆணையம் இழப்பீடு நிர்ணயம் செய்து அறிக்கை தாக்கல் செய்தது. அதில், பலியான குழந்தைகளின் பெற்றோருக்கு தலா ரூ.5 லட்சமும், கடுமையான உடல் காயத்துக்கு உள்ளான குழந்தைகள் கவுசல்யா, மெர்சிஏஞ்சல், விஜய் ஆகியோருக்கு தலா ரூ.6 லட்சமும், ராகுல், திவ்யா, ராஜ்குமார் ஆகிய குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சமும், சிறு காயமடைந்த மீதமுள்ள குழந்தைகளுக்கு தலா ரூ.50 ஆயிரமும் இழப்பீடு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. மேலும், இழப்பீட்டு தொகையை ஆண்டுக்கு (இழப்பீடு கேட்டு விண்ணப்பம் செய்த நாளில் இருந்து) 6 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
ஆனால், இந்த இழப்பீடு தொகை போதாது என்றும், இழப்பீட்டை அதிகரித்து வழங்கவேண்டும் என்றும் குழந்தைகளின் பெற்றோர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ரூ.1 லட்சம்
இந்த வழக்கு ஐகோர்ட்டில் கடந்த ஜூலை மாதம் விசாரணைக்கு வந்தபோது, ‘மனுதாரர்களின் கோரிக்கையை கருணையுடன் பரிசீலிக்கவேண்டும் என்றும் இழப்பீட்டு தொகைக்கான வட்டித் தொகையை 6 சதவீதத்தில் இருந்து அதிகரிக்க வேண்டும்’ என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:–
இந்த தீ விபத்து நடந்தவுடன், தமிழக முதல்–அமைச்சர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரித்தார். அப்போது, பலியான குழந்தைகளின் பெற்றோருக்கு தலா ரூ.1 லட்சமும், தீவிர காயமடைந்த குழந்தைகளுக்கு தலா ரூ.25 ஆயிரமும், லேசான காயமடைந்த குழந்தைகளுக்கு தலா ரூ.10 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்பட்டது.
நினைவிடம்
இதுதவிர படுகாயமடைந்த குழந்தைகளுக்கு அரசு ஆஸ்பத்திரியிலும், தனியார் ஆஸ்பத்திரியிலும் நல்ல விதமாக சிகிச்சை வழங்கப்பட்டது. குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு உளவியல் நிபுணர்களை கொண்டு ‘கவுன்சிலிங்’ வழங்கப்பட்டன. பலியான குழந்தைகளின் பெற்றோருக்கு மத்திய அரசு அருட்கொடையளிப்பாக தலா ரூ.50 ஆயிரமும், காயமடைந்த குழந்தைகளுக்கு தலா ரூ.10 ஆயிரமும் வழங்கியுள்ளது. இதுதவிர பலியான குழந்தைகளின் பெற்றோருக்கு தமிழக அரசு தலா 400 சதுர அடி நிலம் அருட்கொடையாக அளித்துள்ளது. அதில் அந்த பெற்றோர் தற்போது வீடு கட்டி வசிக்கின்றனர். தீயில் கருகி போன சைக்கிளுக்கு பதில் புதிய சைக்கிள்களை மாணவர்களுக்கு அரசு வழங்கியுள்ளது. பலியான குழந்தைகளின் நினைவாக, உள்ளாட்சி அமைப்பு ரூ.30.50 லட்சம் செலவில் நினைவிடத்தை கட்டியுள்ளது.
வட்டி நிர்ணயம்
எனவே, தற்போது நீதிபதி வெங்கட்ராமன் ஆணையம் நிர்ணயம் செய்துள்ள இழப்பீட்டு தொகையை பெற்றோருக்கும், காயமடைந்த குழந்தைகளுக்கும் வழங்கப்படும். அந்த இழப்பீட்டு தொகைக்கு, பொது வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கப்பட்ட வட்டி சதவீதம் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
வங்கி கணக்கு
இந்த பதில் மனுவை நீதிபதிகள் படித்து பார்த்தனர். அரசின் இந்த முடிவுக்கு மனுதாரர் தரப்பு வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஏற்கனவே வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகையை, தற்போது வழங்கவுள்ள இழப்பீட்டு தொகையில் இருந்து கழிக்கக்கூடாது என்றார்.