5ம் வகுப்பு முதல் கட்டாய தேர்வு : 'ஆல் பாஸ்' திட்டம் ரத்து.
ஐந்தாம் வகுப்பு முதல், கட்டாயமாக ஆண்டுஇறுதி தேர்வு நடத்தவும், 'ஆல் பாஸ்' திட்டத்தை நீக்கவும், மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி, எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களை, தேர்வின்றி ஆல் பாஸ் செய்வது அமலில் உள்ளது.
இதற்கு, பல தரப்பிலும் எதிர்ப்புகள் உள்ளன. மத்திய அரசு நடத்திய ஆய்விலும், இத்திட்டத்தால், பல மாணவர்கள், அடிப்படை கல்வியே தெரியாமல், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெறுவது தெரிய வந்தது. எனவே, ஆல் பாஸ் திட்டத்தை, நான்காம் வகுப்போடு நிறுத்தி, ஐந்தாம் வகுப்பு முதல் கட்டாய தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. டில்லியில், சமீபத்தில் நடந்த, மாநில கல்வி அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டத்தில், ஆல் பாஸ் திட்டத்திற்கு, சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால், ஐந்தாம் வகுப்பில் தேர்வு வைக்கும் திட்டத்தை, மாநில அரசுகளே முடிவு செய்யலாம் என, மத்திய அரசின் கல்வி ஆலோசனைக் குழு, தெரிவித்து உள்ளது.
ஆல் பாஸ் திட்டம் ரத்தானால், ஐந்தாம் வகுப்பு, ஆண்டு இறுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, ஆறாம் வகுப்புக்கு மாணவர்கள் செல்ல முடியும். ஆறு, ஏழாம் வகுப்புகளில், பள்ளி அளவிலும், எட்டாம் வகுப்பிற்கு மாவட்டம் அல்லது மாநில அளவிலும் தேர்வு நடத்தப்படும்.தேர்ச்சி பெறாவிட்டால், துணை தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதிலும் தேர்ச்சி பெறாவிட்டால், மீண்டும் அதேவகுப்பில், ஓராண்டு படிக்க வேண்டும்.