பருவமழை காலங்களில் விடுப்பில் செல்ல வேண்டாம்: அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு அறிவிப்பு
வட கிழக்கு பருவ மழையை ஒட்டி, அரசு அதிகாரிகள்-அலுவலர்கள் விடுப்பில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பான அரசு உத்தரவில் கூறியிருப்பதாவது:-
காவல் துறையில் ஆயுதப் படைகள், சிறப்பு காவல் படை உள்ளிட்டவற்றை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த வேண்டும். இதற்கென தகுதியானவர்களை அறிந்து, பணித் திட்டத்தை மாவட்டங்களில் வகுக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட பேரிடர் மேலாண்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், கிராமப்புற அளவில் கடலோர பேரிடர் தடுப்புத் திட்டத்தின் கீழ் பேரிடர் திட்டங்களையும் வகுக்க வேண்டும்.
பருவமழை பாதிப்புகளஐ எதிர்கொள்ளும் வகையில், தகுந்த நபர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு மீட்பு, பெருங்கூட்டத்தை கட்டுப்படுத்துவது, நிவாரணப் பணிகளில் உதவுதல் போன்றவற்றுக்கு பயிற்சி அளித்திட வேண்டும்.
அனைத்து அரசு அலுவலர்களும், அதிகாரிகளும் எந்த நேரமும் பணி செய்திடும் வகையில் தயாராக இருக்க வேண்டும். குறுகிய காலத்தில் பணிகளைத் தெரிவித்தாலும் அதனைச் செய்திட தயாராக இருப்பது அவசியம். ஆகவே, அவர்கள் விடுப்பில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். காவல் துறையின் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட அவசர கால மீட்புப் பணிகளுக்கான மையத்துடன் தொடர்பில் இருக்கும்படி செய்ய வேண்டும்.
பருவகால நிலை, கள நிலவரம் உள்ளிட்டவற்றை பகிர்ந்து கொள்ள பயன்படுத்தப்படும் கருவிகள், இயந்திரங்களைப் பராமரித்து, எந்த நேரமும் செயல்படும் நிலையில் இருக்க வேண்டும். அவசர கால பணிகளுக்கென வாகனங்களை தயார் நிலையில் வைத்திருப்பதுடன், காவல் துறையினர் சட்டம்-ஒழுங்கை சரியான முறையில் பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.