அரசுப்பள்ளி மாணவியருக்கு கராத்தே : இந்த மாதமே துவங்க உத்தரவு.
அரசுப் பள்ளி மாணவியருக்கு, தற்காப்பு கலை பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வளரிளம் பருவத்தில், மாணவியருக்கு தன்னம்பிக்கையை வளர்க்கவும், பாதுகாப்பை
பேணும் வகையிலும், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த வகையில், ஒன்பதுமற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் அரசுப்பள்ளி மாணவியருக்கு, நடப்பாண்டில் இருந்து தற்காப்பு கலை பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.கராத்தே, டேக்வாண்டோ உள்ளிட்ட தற்காப்பு பயிற்சிகள், பெண் பயிற்றுனர்களை கொண்டு தரப்படவுள்ளது. பயிற்சியின் போது ஆசிரியை உடன் இருப்பர். வாரத்தில் செவ்வாய், வியாழக்கிழமைகளில் பள்ளி முடிந்தவுடன், ஒரு மணி நேரம் பயிற்சி அளிக்க வேண்டும். அக்டோபர் துவங்கி, டிசம்பர் வரை பயிற்சி அளிக்கப்படும்.மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மூலம், பெண் பயிற்றுனர்களை தேர்வு செய்து, உடனடியாக பயிற்சியை துவங்க, அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட அலுவலர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து, ஈரோடு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முருகன் கூறுகையில்,''ஈரோடு மாவட்டத்தில், 34 பள்ளிகளில் தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட உள்ளது; விரைவில் பயிற்சி துவங்கும்,'' என்றார்.பெண் பயிற்றுனர்கள் மூலம், பயிற்சி அளிக்க அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், அத்தனை பேர் கிடைப்பார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.அதுவும், இந்த மாதமே பயிற்சி துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தற்காப்பு கலை பயிற்சி பெயரளவுக்கே இருக்கும் என்று, பெற்றோர் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.