ஆதார் சலுகைகள்: ஏழாண்டு சேமிக்க முடிவு
ஆதார்' அட்டையை பயன்படுத்தி, பொதுமக்கள் பெறும் சலுகைகள்மற்றும் மானிய உதவிகளை, ஏழாண்டு வரை
சேமித்து வைக்க, மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.நாடு முழுவதும் தற்போது, 100 கோடிக்கும் அதிகமானோருக்கு, ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
எதிர்ப்பு ; வங்கிக் கணக்கு, சமையல் எரிவாயு மானியம் போன்ற பல சேவைகளுக்கு, ஆதார் எண்களை, அரசு கேட்க துவங்கியுள்ளது. ரேஷன் கடைகளிலும், ஆதார் விபரங்கள் இணைக்கப்படுகின்றன. 'அரசு உதவி திட்டங்கள் பெற, ஆதார் அட்டை கட்டாயம் ஆக்கப்படக் கூடாது' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும் பல்வேறு சேவைகளுக்கு, ஆதார் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. ஆதார் திட்டத்தில், தனிநபரின் ரகசியங்கள் கசியும் அபாயம் உள்ளதால், ஒரு தரப்பினர் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். இந்த சூழலில், மேலும் ஒரு புதிய விதியை, மத்திய அரசு புகுத்தி உள்ளது. அதன்படி, ஆதார் அட்டை மூலம் ஒரு தனிநபர் பெறும் வங்கி மானியம் உள்ளிட்ட சலுகைகள் மற்றும் பல்வேறு பரிமாற்றங்களை, ஏழு ஆண்டுகளுக்கு சேமித்து வைக்க, மத்தியஅரசு முடிவு செய்துள்ளது. கண்டுபிடிப்பது சிரமம் : இதுகுறித்து, ஆதார் ஆணைய அதிகாரிகள் கூறியதாவது: இந்த விபரங்கள், இரண்டு ஆண்டு காலம் மட்டுமே உரிய அதிகாரிகள் மட்டும் பார்க்கும் வகையில், 'ஆன்லைன்' முறையில் சேமித்து வைக்கப்படும். அதன்பின், தேவைப்பட்டால் மட்டும் தேடி எடுக்கும், 'ஆப்லைன்' முறையில், ஐந்து ஆண்டுகளுக்கு தகவல் பாதுகாக்கப்படும்.ஆதார் தொடர்பான சலுகைகள் மற்றும் பணப் பரிவர்த்தனையில் முறைகேடுகள் நடந்தால், அதை கண்டுபிடிப்பது சிரமமாக இருக்கும்; அதற்காகவே இந்த ஏற்பாடு. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
பொது மக்கள் அறிய வசதி! : ஆதார் எண் அடிப்படையில், தாங்கள் பெற்ற ஆதாயங்களின் விபரங்களை, பொதுமக்கள் தெரிந்து கொள்ளவும் வசதி செய்யப்பட்டு உள்ளது. ஆனால், அதற்கு அரசிடம் உரிய அனுமதி பெற வேண்டும்; இரண்டாண்டு வரையிலான தகவல்களை மட்டுமே காண முடியும். தனிநபர்கள், தாங்களாகவே விபரங்களை பார்த்து, தெரிந்து கொள்ளும் வசதியை தந்தால், அது அபாயத்தில் முடியும் என்கின்றனர் அதிகாரிகள்.