'இன்ஸ்பையர்' விருது பெறுவதில் தமிழக அரசு பள்ளிகள் முன்னிலை
இன்ஸ்பையர்' விருதுக்கு, தமிழக கிராமப்புற அரசுப்பள்ளி மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறுவதாக, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குனர், பி.அய்யம் பெருமாள் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மத்திய அறிவியல் தொழில்நுட்ப துறை நிதி உதவியுடன், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் மூலம், 'இன்ஸ்பையர்' விருதுக்கான, புத்தாக்க அறிவியல் ஆய்வு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதுவரை, 73 ஆயிரத்து, 856 பேருக்கு, அறிவியல் ஆய்வு விருதும், தலா, 5,000 ரூபாய் பரிசும் வழங்கப்பட்டுள்ளது.
இன்ஸ்பையர் விருதுப் படி, ஒரு ஐந்தாண்டு திட்டத்தில், ஒரு பள்ளிக்கு இரண்டு விருதுகள் மட்டுமே வழங்கப்படும். ஒரு ஐந்தாண்டு திட்டத்தில், இரண்டு விருது கள் பெற்ற பள்ளிகள், அடுத்த ஐந்தாண்டு திட்டத்தில் தான், விண்ணப்பிக்க முடியும். தேசிய அளவிலான அறிவியல் விருது போட்டிக்கு, இந்தியாவிலேயே தமிழகத்தில் தான், கிராமப்புற அரசு பள்ளி மாணவர்கள், அதிக அளவில் தேர்வாகின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.