தபால் நிலையங்களில் மானிய விலையில் பருப்பு விற்பனை: மத்திய அரசு முடிவு
தீபாவளி பண்டிகை நெருங்குவதால், பொதுமக்களுக்கு பற்றாக்குறை இல்லாமல் பருப்புவகைகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, மத்திய அரசு புதிய முடிவை எடுத்துள்ளது
.
நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்கள் மூலம் மானிய விலையில் பருப்பு விற்பதே அந்த முடிவு. மத்திய நுகர்வோர் விவகார செயலாளர் ஹேம் பாண்டே தலைமையில் டெல்லியில் நடைபெற்ற அமைச்சகங்களுக்கிடையிலான குழு கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. இதில், மத்திய அரசின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.நாடு முழுவதும் ஒரு லட்சத்து 54 ஆயிரம் தபால் நிலையங்கள் உள்ளன.
அவற்றில் கிராமப்புறங்களில் இருப்பவை ஒரு லட்சத்து 39 ஆயிரம் ஆகும்.‘‘மத்திய அரசுக்கு மாநிலங்களில் விற்பனை நிலையங்கள் அவ்வளவாக இல்லாததால், நாடு முழுவதும் கிளைகளைக் கொண்ட தபால் நிலையங்கள் மூலம் துவரம் பருப்பு, உளுந்து உள்ளிட்ட பருப்புவகைகளை மானிய விலையில் விற்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பண்டிகை காலத்தில் மக்களுக்கு குறைவின்றி பருப்புவகைகள் கிடைக்கும்‘ என்று மத்திய நுகர்வோர் அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.