கருச்சிதைவையா ஏற்படுத்தும் மில்க் ஷேக்?

பால் குடிக்க அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கும் மில்க் ஷேக் கொடுத்து சமாளிக்கிற அம்மாக்கள் பலர். 


        பாட்டில் பானங்கள் ஆரோக்கியமற்றவை என நினைக்கிறவர்களும், கடைகளில் விற்கப்படும் விதம் விதமான மில்க் ஷேக்குகளை குடித்து தாகத்தையும் பசியையும் ஆற்றிக் கொள்கிறவர்கள் அனேகம் பேர். பால், எல்லோருடைய அன்றாட உணவிலும் இடம்பிடிக்கும் முக்கிய உணவுப்பொருள் என்பதும், அதனை அருந்துவதற்கு முன்பு காய்ச்சி குடிக்க வேண்டும் என்பதும் நாம் நன்கு அறிந்த விஷயம். 

ஆனால், நம் கண்முன்னே குளிர்பானக்கடைகளில் பாலை காய்ச்சாமல் ஃப்ரிட்ஜிலிருந்து அப்படியே எடுத்துதான்  மில்க் ஷேக் தயாரித்து தருகிறார்கள். மில்க் ஷேக் நல்லது என்கிற எண்ணத்தில், பாலைக் காய்ச்சாமல் அப்படியே பச்சையாக உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகளை விவரிக்கிறார் ஊட்டச்சத்து நிபுணரான மீனாட்சி பஜாஜ். “பல்வேறு வண்ணங்களில், ‘டோன்டு, பேஸ்ட்சரைஸ்டு, ஹோமோஜெனைஸ்டு மில்க்’ என அச்சடிக்கப்பட்டு கடைகளில் விற்கப்படும் பால் பாக்கெட்டுகளை நாம் வாங்கி உபயோகப்படுத்துகிறோம். 

இவற்றில் டோன்டு, ஹோமோஜெனைஸ்டு போன்ற வார்த்தைகள் பாலின் தரம் பற்றி குறிப்பிடப்படுபவையே தவிர, அதன் சுகாதாரத்துக்கு உத்தரவாதம் அளிப்பவை அல்ல.  பாலை உற்பத்தி செய்யும் இடத்திலிருந்து விற்பனை மையங்களுக்கு சப்ளை செய்யப்படும் வரை போக்குவரத்து நேரத்திலும் ஒரே சீரான வெப்பநிலையில் குளிர்பதனப் 
பெட்டியில் வைத்திருக்க வேண்டியது அவசியம். அதிலும், கோடை காலங்களில் காய்ச்சிய பாலில் கூட நுண்ணுயிர்கள் வளர்ந்து கெட்டுப் போக வாய்ப்புண்டு. பால் சரியான வெப்பநிலையில் வைத்து பாதுகாக்கப்படவில்லை எனில், விரைவிலேயே கெட்டுவிடும்.

இப்படி இருக்க, மில்க் ஷேக், ஐஸ்க்ரீம், ஃபலூடா போன்றவற்றை காய்ச்சாத பால் கொண்டு தயாரிக்கிறார்கள். காய்ச்சாத பால் பயன்படுத்தினால் உணவினால் வரும் (Foodborne illness) நோய்களுக்கு 150 மடங்கு அதிக வாய்ப்புண்டு. வாந்தி, பேதி, காய்ச்சல், தலைவலி, உடம்பு வலி மற்றும் அடி வயிற்றுவலி போன்றவை உணவினால் வரும் நோய்களின் அறிகுறிகளே. பசு, ஆடு போன்றவற்றிலிருந்து (செய்தி உலா) எடுக்கப்படும் காய்ச்சாத பாலில் சல்மோனலா, இகோலி மற்றும் லிஸ்டீரியா போன்ற பாக்டீரியாக்கள் இருக்கின்றன. 

கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் காய்ச்சாத பாலில் தயாரிக்கப்பட்ட பொருட்களை சாப்பிடும்போது பாக்டீரியாவால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். காய்ச்சாத பாலில் செய்யப்படும் பொருட்களை நோய் எதிர்ப்புசக்தி குறைந்தவர்கள் எடுத்துக் கொண்டால், சில நாட்களிலேயே டைபாய்டு போன்ற கடுமையான நோய் ஏற்படக்கூடும். சில நேரங்களில் உயிருக்கே கூட ஆபத்தாகி விடும். கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவு, கருவிலேயே குழந்தை இறந்து பிறப்பது அல்லது பிறந்த சில மணிநேரங்களில் குழந்தை இறத்தல் போன்றவை கூட ஏற்படலாம்.

இப்போது பால் பாக்கெட்டுகளில் ஊசி மூலம் பாலை உறிஞ்சிவிட்டு அதற்கு பதில் நீர் நிரப்புவது, அதன் கெட்டித்தன்மை, நுரை போன்றவற்றுக்காக கலப்படம் செய்வது பற்றி செய்திகளில் படிக்கிறோம். இதுபோன்ற கலப்படப் பாலை காய்ச்சாமல் சாப்பிடும்போது மேலும் பல நோய்களுக்கும் வழிவகுக்கும்” என்றும் எச்சரிக்கிறார் மீனாட்சி பஜாஜ். "ஏழை மக்கள் விலை மலிவாக உள்ளதால் சில்லறைப் பாலை (Loose milk) உள்ளூர் பால்காரரிடம் வாங்கி உபயோகப்படுத்துகிறார்கள். 

பால்காரர் கேன்களுக்குள் கைகளைப் பயன்படுத்தி எடுக்கும் போது சுகாதாரக்குறைவு ஏற்படுகிறது. அந்தப் பாலை கண்டிப்பாக காய்ச்சிய பிறகே அருந்த வேண்டும். குளிர்பானக் கடைகளிலும் இதுபோன்ற சில்லறைப் பால் உபயோகப்படுத்தக்கூடும். அதில் கலப்படம் செய்யப்பட்டிருக்கவும், சுகாதாரக்குறைவாக இருக்கவும் வாய்ப்பிருப்பதால் கூடுமானவரை வெளியில் வாங்கி சாப்பிடாமல், வீட்டில், நன்றாக காய்ச்சி ஆறிய பாலில் கோல்ட் காபி, மில்க் ஷேக் போன்றவற்றை செய்து சாப்பிடுவது நல்லது” என அறிவுறுத்துகிறார் மீனாட்சி பஜாஜ்.

-- நன்றி குங்குமம் டாக்டர் 

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank